சாத்துார்:ஏழாயிரம்பண்ணை அருகே ஊத்துப்பட்டியில் ராஜேஸ்வரி 40,கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
ஏழாயிரம்பண்ணைரெட்டியாபட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி கொத்தனார். இவர் மனைவி ராஜேஸ்வரி, இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.கருத்து வேறுபாடால் தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். ராஜேஸ்வரி ஊத்துப்பட்டியில் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கும் சாத்தூர் சங்கரநத்தத்தை சேர்ந்த பரமசிவத்திற்கும்42, பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ராஜபாண்டிக்கும் ராஜேஸ்வரியும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரியும் அவரது பெண் குழந்தையும் ஊத்துப்பட்டியில் தங்கினர். ராஜபாண்டியும் அவரது மகனும் ரெட்டியபட்டியில் தங்கினர்.
ராஜேஸ்வரி இரவில் காற்றுக்காக எப்பொழுதும் வீட்டை திறந்து வைத்து தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று காலை 6:30 மணியளவில் ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார்.
போலீசார் அவரது அலைபேசியை பார்த்தபோது காலையில் பரமசிவம் அவருக்கு போன் செய்து பேசியது தெரிய வந்தது. பரமசிவம் தலைமறைவாக உள்ளார். ராஜபாண்டியிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்தை மாவட்ட எஸ். பி. சீனிவாச பெருமாள் பார்வையிட்டார்.மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.