விருதுநகர்:விருதுநகரில் ஒரு மாவட்டம் ஒரு விளைபொருள் என்னும் அணுகுமுறையின் கீழ் விருதுநகர் மாவட்டம் சிறுதானியத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.தேர்வு செய்யப்பட்டுள்ள பொருளின் உற்பத்தியை அதிகப்படுத்தி விளைபொருளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். ஹைதராபாத் எண்ணெய் வித்து உற்பத்தி இயக்குனரக முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஸ்ரீகாந்த், திட்ட ஆலோசகர் ஹிமான்சு பி கோடே மாவட்டத்தில் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் ஜெயசீலனுடன் கலந்துரையாடினர். அப்போது சிறுதானிய உணவுகளை பிரபலபடுத்தும் நோக்கில் உணவு திருவிழா நடத்துவது, அரசு அதிகாரிகளிடையே சிறுதானிய உணவு பயன்பாட்டினை அதிகரிப்பது ஆகியவை குறித்து வேளாண் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். உடனடி சிறுதானிய உணவுகளின் ஊட்டச்சத்து விகிதங்களை ஆய்வு செய்து குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயார் செய்து வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ராமசுப்பிரமணியராஜா, நபார்டு வங்கி மேலாளர் ராஜசுரேஷ்வரன், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் கலந்துரையாடினர். செயல்திட்ட அறிக்கை தயார் செய்து ஒப்புதலுக்கு வழங்கினால் தேவையான வழிகாட்டுதல்களும் நிதி உதவியும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர்.
கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள், இயந்திரங்களையும் பார்வையிட்டனர். வேளாண் இணை இயக்குநர் பத்மாவதி, கலெக்டர் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.