திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே குடும்ப தகராறில் மாமியார் சீதாலட்சுமியை 60, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மருமகள் மகாலட்சுமியை 27 போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே துலுக்கர்பட்டி ஊராட்சி வடுகன்பட்டியை சேர்ந்தவர் சண்முகவேல். ஊராட்சி துணைத்தலைவர். இவரது மனைவி சீதாலட்சுமி 60. இவர்களது மகன் ராமசாமி 32. அவர் மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 5 வயது, 9 மாத ஆண் குழந்தைகள் உள்ளன. பெற்றோருடன் இல்லாமல் ராமசாமி இன்னொரு வீட்டில் வசிக்கிறார்.
நேற்று முன்தினம் காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீதாலட்சுமி, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்க செயினும் திருடு போயிருந்தது.
சீதபற்பநல்லூர் போலீசார் விசாரித்தனர்.
நகைக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்த 'சிசிடிவி' காட்சிகளில் ஆண் உடையில் மகாலட்சுமி ஹெல்மெட் அணிந்து இரும்பு கம்பியுடன் வீட்டுக்குள் செல்வதும் பின்னர் வெளிவரும் காட்சிகளும் பதிவாகியிருந்தன. போலீசார் உரியமுறையில் விசாரித்ததில் மாமியாரை மகாலட்சுமி அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மகாலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாதாரண குடும்பத் தகராறில் கவுரவமான குடும்பத்து 27 வயது பெண் கொலை செய்யும் அளவிற்கு சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாலட்சுமி சிறை செல்லும்போது அவரது ஒன்பது மாத கைக்குழந்தை அழுதது பரிதாபமாக இருந்தது.
குழந்தைகளை மகாலட்சுமியின் தாயாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.