திருநெல்வேலி:காரில் சென்ற நகைக் கடைக்காரரை தாக்கி, காரை கடத்தி, 1.5 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற எட்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் நகைக்கடை நடத்தி வருபவர் விஸ்வநாத். இவரது மகன் சுஷாந்த் 32. வட மாநிலங்களில் ஒன்றை சேர்ந்த இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருநெல்வேலியில் நகைக் கடை நடத்தி வருகின்றனர்.
சுஷாந்தின் மாமனார் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் நகைக்கடை நடத்தி வருகிறார். மாமனாரிடம் பணம் கொடுத்து, நகைகள் வாங்கி வருவதை சுஷாந்த் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
நேற்று காலை சுஷாந்த் அவரது உதவியாளர் விஷால், 22, ஆகியோர் கேரளாவுக்கு காரில் சென்றனர். சுஷாந்த் காரை ஓட்டினார். காலை 7:00 மணிக்கு சுஷாந்தின் காரை இரண்டு கார்கள் பின் தொடர்ந்தன.
மூன்றடைப்பு கடந்ததும் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் கார் ஏறும்போது பின் தொடர்ந்தவர்கள், சுஷாந்த் கார் மீது மோதி நிறுத்தினர்; சுஷாந்தையும் விஷாலையும் தாக்கினர்; விஷால் தப்பி ஓடினார்.
பாலத்தில் வந்த ஆம்னி பஸ் டிரைவர் மற்றும் பயணியர் பஸ்சை நிறுத்தி என்ன தகராறு என இறங்கி விசாரித்தனர். இதையடுத்து, அந்த கும்பல் சுஷாந்தை காருக்குள் தள்ளி அவர்களே ஓட்டிச் சென்றனர்.
நாங்குநேரி நான்கு வழிச்சாலை சுங்கச்சாவடிக்கு முன் இடதுபுறம் திரும்பும் நெடுங்குளம் கிராம சாலையில், காரை ஓட்டிச் சென்றனர்.
காட்டுப் பாதைக்கு சென்று, சுஷாந்தை இறக்கி விட்டதோடு காரிலிருந்த 1.5 கோடி ரூபாயுடன் அந்த கும்பல் தாங்கள் வந்த கார்களில் தப்பினர். இது குறித்து சுஷாந்த் அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
நெடுங்குளத்தில் கார் வேகமாக செல்வதை தன் வீட்டு 'சிசிடிவி' மூலம் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்தவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
மூன்றடைப்பு மற்றும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். பணத்தை கொள்ளையடித்த கும்பல் நாங்குநேரி சுங்கச்சாவடியை தாண்டி நாகர்கோவில் சாலையில் செல்லவில்லை. அவர்கள் மீண்டும் திருநெல்வேலி நோக்கி திரும்பி இருக்கலாம் என தெரிகிறது.
பணத்தை பறித்த கும்பலில் எட்டு பேர் இருந்ததாகவும் அவர்கள் தன் மீது மிளகுத்துாளை துாவியதாகவும் சுஷாந்த் தெரிவித்துள்ளார். நான்கு தனிப்படைகள் விசாரிக்கின்றன.