திருவாடானை:காரைக்குடி அழகப்பா பல்கலை கடலோரவியல் கல்லுாரி ஜூலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இயங்கும், என காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி கூறினார்.
கடலியல், கடலோரவியல் கல்லுாரி பேராசிரியர் ஸ்டெல்லா பிரிவு உபசார விழா தொண்டியில் நடந்தது. விழாவில் துணைவேந்தர் ரவி கூறியதாவது:
தொண்டியில் 2000 ஆண்டில் கடலியல், கடலோரவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு மாற்றப்பட்டது.
தற்போது இக்கல்லுாரியில் 160 மாணவர்கள் படிக்கின்றனர். வட இந்தியாவில் இருந்து வரும் தர நிர்ணய குழுவினர் இக்கல்லுாரியை ஆய்வு செய்ய உள்ளனர். ஆகவே ஜூலை முதல் தொண்டிக்கு இக்கல்லுாரி மாற்றப்படும்.
புதிய மாணவர்கள் சேர்க்கை இங்கு நடக்கும். தர நிர்ணயத்திற்காக மட்டும் மாற்றவில்லை. நிரந்தரமாக இக்கல்லுாரி இனிமேல் இங்கு செயல்படும். மாணவர்களுக்கு தங்கும் விடுதி, தண்ணீர் சேமிக்கும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் நீர் தேக்க தொட்டி கட்டடப்பட்டுள்ளது.
ரூ.25 லட்சத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. வெளி மாநில மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.
போதுமான ஆசிரியர்கள் இல்லை. இருந்த போதும் மாணவர்கள் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கடலுக்குள் சென்று ஆராய்ச்சி செய்யும் வகையில் பழுதான படகு சரி செய்யப்பட்டு பயன்படுத்தபடும். தொண்டியில் அமைந்திருக்கும் கடலியல்துறை அமைப்பு வேறு எங்கும் அமையவில்லை.
இங்கு ஏற்கனவே ஆய்வு செய்த தர குழுவினர் இக் கல்லுாரியின் செயல்பாடுகள் குறித்து பாராட்டிஉள்ளனர், என்றார்.