போடி:தேனி மாவட்டம், போடி டெப்போ அரசு பஸ்களில் டயர்கள் கழன்று ரோட்டில் ஓடும் நிலை தொடர்கிறது. நேற்று இரண்டாவது முறையாக பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தமிழக, கேரளா பகுதியை இணைக்கும் வழித்தடத்தில் போடி பஸ்ஸ்டாண்ட் உள்ளது. போடி டெப்போவில் இருந்து கிராமங்களுக்கு 23 பஸ்களும், பிற மாவட்டங்களுக்கு 46 பஸ்களும் இயக்கப்படுகின்றன.
பஸ்கள் முறையாக பராமரிக்காததால் டயர்கள் அடிக்கடி கழன்று ரோட்டில் ஓடுவது தொடர்கிறது.
நேற்று காலை போடி -- சின்னமனுார் டவுன் பஸ் (டி.என். 57 என். 1365) தேவாரம்- போடி ரோட்டில் வந்து கொண்டிருந்தது. காளிவேல் ஓட்டினார். காலை 6:40 மணியளவில் தர்மத்துப்பட்டி அருகே வரும் போது பஸ்சின் பின் டயர்கள் கழன்று ரோட்டில் ஓடின.
டிரைவர் சாதுர்யமாக பிரேக் பிடித்ததால் பின்பக்க டயர்கள் இன்றி சிறிது தூரம் சென்று பஸ் நின்றது. பயணிகள் உயிர் தப்பினர். மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு பயணிகள் போடிக்கு அனுப்பப்பட்டனர்.
15 நாட்களுக்கு முன்பு போடியில் இருந்து வீரபாண்டி சித்திரை திருவிழாவிற்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ் போடி-- தேனி ரோட்டில் மீனா விலக்கு அருகே பின் டயர்கள் கழன்று சிறிது தூரம் ஓடி ரோட்டின் மைய தடுப்புச் சுவர் மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.
பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் போக்குவரத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.