பட்டூர் வேளாண் விரிவாக்க மையத்தில், கிடங்கு மேலாளர் பொறுப்பை அலுவலர்கள் ஏற்க மறுப்பதால், விவசாயிகள் விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் பெறமுடியாமல் தவிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், மங்களூர் ஒன்றியத்தில் 85 கிராமங்கள், அதன் துணைக் கிராமங்கள் என நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
அவர்களின் நலனுக்காக பட்டூர் மற்றும் மங்களூரில் வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள் உள்ளது. பட்டூர் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை மற்றும் இடுபொருட்கள் வழங்கக்கூடிய விற்பனை கிடங்கு உள்ளது.
இங்கு கிடங்கின் மேலாளராக இருந்த சக்திவேல், கடந்த மே மாதம் 12ம் தேதி விபத்தில் படுகாயமடைந்து மருத்துவ விடுப்பில் உள்ளார்.
இதனால் கிடங்கு மேலாளர் பொறுப்பை ஏற்க வேண்டிய அடுத்த நிலை அதிகாரிகள் வேளாண் உதவி இயக்குனர் அறிவுறுத்தியும் அந்த பொறுப்பை ஏற்க மறுக்கின்றனர்.
அவர், பணியில் கண்டிப்பு காட்டுவதால், அவருக்கு கீழுள்ள அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்காமல், சங்கங்களின் மூலம் பொறுப்பு ஏற்காமல் இருக்க அழுத்தம் கொடுக்கின்றனர்.
இதனால் கடந்த 15 நாட்களாக மானிய விலையில் விதை மற்றும் இடுபொருட்களை பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.
அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில், இனி விவசாயிகள் விதைப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் நலன் கருதி விதை மற்றும் இடுபொருட்கள் தடையின்றி கிடைத்திட கிடங்கு மேலாளர் பணியிடத்திற்கு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகளும் இதனால் பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விற்பனை கிடங்கு மூலமாகவே விவசாயிகளுக்கு விதை மற்றும் இடுபொருட்கள், அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த கிடங்கு மேலாளர் பொறுப்பை, அலுவலர்கள் யாருமே ஏற்காததால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
விவசாயிகள் நலன் கருதி கிடங்கு மேலாளர் பணியிடத்திற்கு, உரிய அதிகாரியை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.