மரக்காணம்:முன் விரோதம் காரணமாக, இறந்து போன ரவுடியின் தம்பியை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அனிச்சக்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்ராஜ், 27; ஓட்டல் பணியாளர். இவரது அண்ணன் ரவுடி வினோத்ராஜை, புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ரவுடி அன்புரஜினி தரப்பினர், முன் விரோதம் காரணமாக, 2019ல் வெட்டிக் கொலை செய்தனர்.
தொடர்ந்து, 2020ல் வினோத்ராஜ் நண்பர் சோழன் தரப்பினர், ரவுடி அன்புரஜினியை வெட்டிக் கொலை செய்தனர். இதற்கு விமல்ராஜ் தான் காரணம் என, அன்புரஜினியின் ஆதரவாளர்கள் விமல்ராஜியிடம், இரு மாதங்களுக்கு முன் தகராறு செய்தனர். நேற்று காலை, 8:30 மணிக்கு விமல்ராஜ் பைக்கில் வேலைக்கு சென்ற போது, மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர், அவரை வழி மறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பியோடினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த விமல்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.