திருப்பூர்;உலகளாவிய ஆயத்த ஆடைத் துறையில், நெறிமுறைகளை வகுக்கும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளதாக, ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஓர் அங்கமாக, ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் (AMHSSC) இயங்கி வருகிறது. ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில், இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது.
அரசு மற்றும் தொழில்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், 'பிரதமர் கவுசல் விகாஸ் யோஜனா திட்டம்', ஆடை அலங்காரத்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதாக அமைந்தது. திறமை வாய்ந்த பணியாளர்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவது, இந்த கவுன்சிலின் முக்கிய பணியாக உள்ளது.
ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு அலங்காரத் துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல் கூறியதாவது:
ஆயத்த ஆடை உற்பத்தித்துறையில் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர், பல்வேறு நாடுகளிலும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். உலகம் முழுவதும், தனித்திறமை வாய்ந்த இந்திய வல்லுனர்கள் வேலை வாய்ப்பில் முன்னோடியாக உள்ளனர்.அமெரிக்க ஆயத்த ஆடை வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றனர். இங்கிலாந்து ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தி, ஐக்கிய அரசு நாடுகளில், ஆடம்பர ஆயத்த ஆடை பேஷன் மற்றம் தர நிர்ணயம், இத்தாலி பேஷன் டிசைன், ஜவுளி கண்டுபிடிப்பு, தோல் பொருள் தயாரிப்பு, ஆடம்பர அலங்காரம் போன்ற பணிகளிலும், இந்தியாவில் வழங்கிய பயிற்சி சான்றிதழ் வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய அரசு திட்டம், தொழிலாளர் நலனுக்கும், தொழில் மேம்பாட்டுக்கும் இத்திட்டம் அக் ஷய பாத்திரமாக மாறியுள்ளது. இத்திட்டம் வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு, வேலை வாய்ப்பு நடைமுறை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் உரிமை பாதுகாப்பு, நியாயமான ஊதியம், வேலை வாய்ப்பு நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ஆயத்த ஆடைத் துறையில், நெறிமுறைகளை வகுக்கும் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. ஆடை அலங்காரம் மற்றும் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்திக்கான, தொலைநோக்கு திட்டமாக அமைந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.