சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணுவது போல் திருடிய இரண்டு பெண்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று உண்டியல் பணத்தை எண்ணும் பணி நடந்தது. சிவகாசியை சேர்ந்த சுமார் 10பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் உண்டியலை திறக்கும் போதும் உண்டியல் பணத்தை எண்ணும் போதும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நேற்று சங்கரநாராயணசுவாமி கோயிலில் உண்டியல் பணம் எண்ணுவது வீடியோ பதிவு செய்யப்பட்டது. கோயில் கண்காணிப்பாளர் சந்திரசேகர் டிவியில் உண்டியல் பணம் எண்ணப்படுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு பெண் சேலையை உதறுவது போல பணத்தை எடுப்பதும், மற்றொரு பெண் பணத்தை எடுத்து சேலையில் சொருகி வைப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சந்திரசேகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் டவுன் போலீசார் கோயிலுக்கு வந்து சந்தேகத்திற்கு இடமான இரண்டு பெண்களிடமும் விசாரணை செய்தனர். அப்போது அந்தப் பெண்கள் பணத்தை திருடியது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட 18 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உண்டியல் பணத்தை திருடிய சிவகாசி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி(63 ), சிவகாசி விஸ்வநத்தம் தெருவை சேர்ந்த ஆறுமுகசாமி மனைவி கலாவதி(63) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.