பருத்தி ஆடை உற்பத்தியிலும் வர்த்தகத்திலும் திருப்பூர் உச்சம் தொட்டுவிட்டது; செயற்கை இழை ஆடை உற்பத்திக்கு, தொழில்துறை மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். செயற்கை நுாலிழை ஆடைகள் பயன்பாட்டுக்கும், பராமரிப்புக்கும் எளிது; அதன் தரம் நீடித்து உழைக்கும்; எளிதில் கிழியாது; எல்லாவற்றையும்விட, 'அயர்ன்' செய்யாமல், அப்படியே அணியலாம். உலக நாடுகள் இவ்வகை ஆடைகளை விரும்புவதால், நாமும் மாறியாக வேண்டும்.
தொழில்துறையினர் புதிய தொழில்நுட்பத்துக்கு மாறுவதில் பெரிய சிக்கல் இருக்காது. செயற்கை நுாலிழையில், பின்னல் துணி தயாரித்து, ஆடைகளாக மாற்றுகிறோம். வியர்வை உறிஞ்சுவதில், பருத்தி நுாலுக்கு இணையாக, செயற்கை நுாலிழைகளும் இருக்கின்றன. காற்று உட்புகுந்து வெளியேறும் தன்மையுடன் ஆடை இருப்பதால் வரவேற்பு அதிகம். அதேசமயம், சாயமிடும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்.
செலவைக் குறைத்து, தரத்தையும் மேம்படுத்த முடியும் என்றால், எந்த வர்த்தகமும் லாபகரமானதாகத் திகழும். செலவைக் குறைத்து தரம் சிறப்பாக இல்லாவிட்டாலும், தரம் சிறப்பாக இருந்து செலவு அதிகளவில் இருந்தாலோ வர்த்தகத்தில், சாதிப்பது சிரமம். இந்தச் சவாலில் வெற்றிபெறுவது தொழில்முனைவோரின் திறமையை அடையாளப்படுத்தும்.
பெண்களும் கால்பதிக்கலாம்
கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை காட்டிலும் பெண்கள் தற்போது அதிகளவு தொழில்துறையில் கால்பதித்து வருகின்றனர். பெண்கள் தொழில் நடத்த முடியாது என்ற எண்ணம் குறைந்துள்ளது; இருப்பினும், பெண்கள் முழு சுதந்திரமாக தொழில் துவங்க முன்வருவதில்லை. சிறிய முதலீடு செய்து தொழில் துவங்க குடும்பத்தினர் ஒத்துழைப்பு அவசியம்.
குடும்ப நிர்வாகத்தில் ஜொலிக்கும் பெண்கள், தொழில்துறையில் அற்புதமான வெற்றிகளை ஈட்ட முடியும். அதேசமயம், பல்வேறு இடையூறுகளை தாண்டித்தான் ஜொலிக்க முடியும் என்பதுதான் யதார்த்தம். இதனால்தான், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே, பெண் தொழில் முனைவோர் இருக்கின்றனர்.
பெண்கள், விரும்பியதை படித்து, வேலைக்கு செல்வதை காட்டிலும், சுயதொழில் துவங்கி நடத்துவதே முழுமையான சுதந்திரம். இதைக் குடும்ப உறுப்பினர்கள் புரிந்துகொண்டால், தொழில்முனைவோராக விரும்பும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மத்திய, மாநில அரசுகள், தொழில் வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இருப்பினும், போதிய விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இல்லாததால் தொழில் முனைவோரை சென்றடைவதில்லை.
விழிப்புணர்வோ, வழிகாட்டுதலோ பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. தொழில்முனைவோராக விரும்பும் எண்ணம் உள்ளவர்கள், இதை நோக்கித்தான் முதலில் பயணிக்க வேண்டும். சிறு, குறு தொழில்கள் அதிகம் துவங்கி, தொழில்முனைவோரை உருவாக்கியிருந்தால், இந்தியா வல்லரசு நாடாக உயர்ந்திருக்கும்; இன்னும் நம்பிக்கையுடன் செயல்பட்டால், உலகையே திரும்பிப் பார்க்க செய்யலாம்.
வேலையா, சுயதொழிலா
அனைவரும் படிக்கின்றனர்; அனைவரும் தொழில் முனைவோர் ஆகமுடியாது; தேவையும் இல்லை. ஒவ்வொருவரின் லட்சியத்தின் அடிப்படையில், சுய தொழிலா, கவுரவமான வேலையா, அரசு வேலையா என்று முடிவு செய்கின்றனர். தொழில்முனைவோராக வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டிருப்பவர்கள், அதற்கான உழைப்பை நிச்சயம் தர வேண்டும். அதற்குத் தேவையான அறிவாற்றலும் அவசியமானது.
தொழில் முனைவோராக மாறினால், நமது நேரத்தை நமக்காகவே செலவிடலாம்; வேலைக்கு செல்வதாக இருந்தால், நமது நேரம் மற்றவர்களுக்காக செலவழிக்க நேரிடும். தொழில் முனைவோருக்கு சவால்கள் அதிகம் இருக்கும்; வேலைக்கு செல்பவருக்கு, சவால்களும், சோதனையும் குறைவு. இதுவே போதும் என்று முனைப்புக் காட்டாதபோது, தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தை வெற்றிகரமாக அடைவது சிரமமானதுதான்.
தன்னம்பிக்கையுடன் 'ரிஸ்க்'குகளைத் தாண்டி முன்னேறும் தன்மை; விடாமுயற்சி செய்து, இலக்கை நோக்கி பயணிப்பது; தலைமை பொறுப்பேற்று நடத்துவது; தொழிலாளர்களை இணைக்கும் தன்மை; நெகிழ்வு மற்றும் சகிப்புத்தன்மை; கற்றுக்கொள்ளும் ஆர்வம்; வீட்டையும், தொழிலையும் சமமாக பார்க்கும் திறன் இருந்தால், பெண் தொழில்முனைவோர் வெற்றிகளைக் குவிக்கலாம். லாப - நஷ்டக்கணக்கின் அடிப்படையிலானது அல்ல வெற்றி; வணிகத்திற்கும், சமூகத்திற்குமான இணக்கம் உயர்ந்திருந்தால், அதுவே வெற்றியின் சிறப்பு.
தேசத்தின் சுவாசக்காற்று
தொழில் முனைவோர் என்பவர், தேசத்தின் சுவாசக்காற்று போன்றவர்கள்; தாங்களும் முன்னேறி, நாட்டையும் முன்னேற்ற பாதையில் வழிநடத்துபவர்கள். நாட்டின் வருவாய், பொருளாதாரத்தை உயர்த்தி பிடிப்பவர் தொழில்முனைவோர். உள்ளூர் வளர்ச்சி, சுதந்திர சிந்தனை, புதுமையான படைப்புகளில் ஆர்வம் இருந்தால், தேசம் வளர்ச்சியடையும். இளம் தலைமுறையினருக்கு இத்தகைய எண்ணத்தை ஏற்படுத்துவது மூத்தோரின் கடமை. இதற்கேற்ப கல்வி அடிப்படைகளும் அமைய வேண்டும். இளம் வயது தொழில்முனைவோர் அதிகரித்தால்தான், ஸ்திரமான பொருளாதாரத்தை நோக்கி தேசம் முன்னேறும்.
உலக நாடுகள் அனைத்தும், நீடித்த நிலையான இயற்கை சார் உற்பத்தியை விரும்புகின்றன. கழிவுகளை மறுசுழற்சி முறையில், பயன்படுத்தும் பொருளாக மாற்றுவதை விரும்புகின்றன. மறுசுழற்சி தொழில்நுட்பத்தை பின்பற்றினால், புதிய பொருளுக்கான தேவையும், தட்டுப்பாடும் குறையும். துாக்கி வீசப்படும், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து, பாலியஸ்டர் நுால் மற்றும் ஆடை தயாரிக்கலாம்.தொழில்துறை என்பது சுற்றுச்சூழலுக்கு இம்மியளவுகூட கெடுதல் தராததாக மாற வேண்டும். இது தொழில்நுட்பங்களின் மூலம் சாத்தியமாகும்.
மறுசுழற்சி தொழில்நுட்பத்தால், நம்மை சுற்றியுள்ள இயற்கை சூழல் பாதுகாக்கப்படும். மக்காத குப்பையை, பயனுள்ள பொருளாக மாற்றும், 'REDUCE, REUSE, RECYCLE (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) என்ற தாரக மந்திரத்தை, பின்பற்றினால், நமது பூமியே சொர்க்கமாக மாறும்.