உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தனக்குள் பல்வேறு திறமைகளைக் கொண்டிருக்கிறான். அவற்றை வெளிப்படுத்துவதற்கும் மேம்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புகள் தான் கிடைப்பதில்லை. பாலின பாகுபாடு, சமூகத்தின் எதிர்மறை மனப்பான்மைகளை கடந்து பெண்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வழி வகை செய்து கொடுக்க வேண்டும்; அதுவே அவர்களின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். திறமையில்லாதவர் என யாரும் இல்லை; திறமையின் அளவுதான் மாறுபடுகிறது. உலகில் மிக வேகமாக ஓடக் கூடியது மனித எண்ணங்கள் தான்; அவற்றைக் கட்டுப்படுத்தும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண் கல்வி முக்கியம்
பெண் குழந்தைகள், பள்ளி இடைநிற்றல் என்பது கூடாது; குறைந்தபட்சம் கல்லுாரி வரையாவது கற்பது அவசியம். அது, அவர்களுக்கு மட்டுமின்றி பெண்களின் சமூகத்திற்கும், தேசத்தின் மனித வள மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும். தோல்விகள், துன்பங்கள், தடைகள் என்பது மனித வாழ்வில் இயல்பானவை; அவற்றை கண்டு துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் கல்வி கற்க வேண்டும்.
கிராமங்கள், வீதி, தெருக்கள் தோறும் சென்று, இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், 'ஒவ்வொருவரும் சாதிக்க பிறந்தவர்கள்' என்ற மனப்பான்மையை அவர்கள் மனதில் விதைக்கும் போது, நிச்சயம் ஒரு மாற்றத்தை காண முடியும்.
ஒரு பெண் என்பவள், தன் பெற்றோர், கணவன், மாமியார், மாமனார் என அனைத்து உறவுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவளாக இருக்கிறாள். பெண், கல்வி கற்கிறாள்; குழந்தையை பராமரிக்கிறாள்; வேலைக்கு செல்கிறாள்; சமையல் செய்கிறாள்; கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறாள்; வீட்டை தினசரி சுத்தம் செய்கிறாள். இப்படி, பன்முக பல்வேறு பணிகளைச் செய்கிறாள். பெண் என்பவள் 'சும்மா' இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அவர்களின் உழைப்பு மற்றும் பங்களிப்பை மதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும்; உணர முடியும்.
'நேரத்திருட்டு' கூடாது
ஒவ்வொரு நாளும் அன்றைய பணியை திட்டமிட்டு செய்ய வேண்டும். தாமதமாக பணிக்கு வருவது; டீ, காபி, உணவு இடைவேளை நேரத்தை கூடுதலாக பயன்படுத்துவது; மொபைல் போனில் நேரத்தை செலவிடுவது, வீண் சிந்தனை, கவனச் சிதறலில் நேரத்தை விரயமாக்கக்கூடாது; நேர மேலாண்மை மிக முக்கியம்.
நம்மிடம் தொழிலாளர் பற்றாக்குறை கிடையாது. எந்தவொரு நாடு, மாநிலம், மாவட்டம் மற்றும் பகுதியிலும் சரி, குறிப்பிட்ட சாரார் கல்வி கற்று, அடுத்த நிலைக்கு உயரும் போது, தங்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு தேடுவது இயல்பு தான்; அந்த வாய்ப்பை, அவர்களுக்கு ஏற்படுத்தித்தர வேண்டியது அரசின் கடமை. அவர்களால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். தமிழக இளைஞர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து சென்றுவிட்டனர் என்பதே யதார்த்தம். நம்மை சுற்றி நிறைய மனித வளம் உள்ளது; அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
கல்வித்தரம் போதுமா
நாட்டில் உள்ள மக்கள் தொகையில், 40 சதவீதத்தினர் குழந்தைகள்; அவர்கள் நல்ல நிலையில் வளர்ந்து வருவதாக தெரிந்தாலும், சத்துக்குறைபாடு அதிகளவில் உள்ளது. அனைவருக்கும் கல்வி கிடைக்கிறது; பள்ளி சென்று படிக்கின்றனர். ஆனால், அவர்கள் கற்கும் கல்வி தரமானதாக உள்ளதா என்றால், 'எதிர்பார்த்தளவு இல்லை' என்று தான் சொல்ல வேண்டும்.
எட்டாம் வகுப்பு படித்த மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாடம் தெரிவதில்லை; பத்தாம் வகுப்பு முடித்த மாணவனுக்கு, ஏழாம் வகுப்பு பாடம் தெரிவதில்லை என கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக கல்வி வளர்ச்சி, படிப்பறிவு சதவீதம் அதிகரித்து வந்தாலும், கல்வித்தரம் உயராமல், கல்வி கற்றவர்களை கணக்கிட முடியாது.
பாலின பேதம் அகலட்டும்
பெண்களின் நிலை முன்னேறியிருக்கிறது. ஆனால், ஆண் - பெண் பேதம் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது.
'பெண்கள் பஸ் ஓட்டுகின்றனர்; அரசியலில் இருக்கின்றனர்; தேர்வில் முழு மதிப்பெண் பெறுகின்றனர்' என, அவர்களின் சாதனைகளை பட்டியலிட்டாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் அத்தகைய சாதனையை, ஒட்டு மொத்த பெண்களின் வளர்ச்சியாக கருத முடியாது.
'ஆதிக்கம் - அடக்குமுறை கூடாது' என்ற விழிப்புணர்வை, அத்தகைய செயலில் ஈடுபடுபவர்களிடமும் ஏற்படுத்த வேண்டும்; அத்தகையவர்கள் திருந்தினால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆண் - பெண் பேதம் இல்லா சமுதாயம் உருவாகும் போது, முன்னேற்றத்தின் வளர்ச்சி இரட்டிப்பாகும்.
பாலியல் கல்வி அவசியம்
பிள்ளைகள், 15, 16 வயதை எட்டும் போது, அவர்களுக்கு உடல் ரீதியாக என்ன மாதிரியான மாற்றம் ஏற்படுகிறது என்பதை சொல்லி கொடுத்து வளர்க்காதது தான், பாலியல் குற்றங்கள் அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைகிறது. அந்த வயதில் உடலில் பாலியல் ரீதியான துாண்டுதல்கள் வரத்தான் செய்யும்; அதை எதிர்கொண்டு, பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
பெண்களை மதிக்கும் சமூகம் உருவாகும் போது தான், பாலியல் குற்றங்கள் குறையும். வளரிளம் பருவம் என்பது மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது; இப்பருவத்தில் சவால்கள், சிக்கல்கள், குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போனால், வாழ்க்கையே திசை மாறிவிடும்.
நாடு வளர்ச்சி பெற, சரியான கொள்கை வகுக்க வேண்டும்; கொள்கைக்கு ஏற்ற திட்டங்கள் வேண்டும்; அவற்றை ஆதரிக்கக்கூடிய சட்டங்கள் இயற்ற வேண்டும்.
அந்த விஷயங்களை அமல்படுத்தக் கூடிய பொறுப்புள்ள அதிகாரிகள், ஆட்சியாளர்கள் வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிறைய திட்டங்களை அறிவிக்கின்றன.
அதற்கேற்ப நிதி ஒதுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. கல்விக்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டும்; ஜி.டி.பி., எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியில், ஆறு சதவீதம் கல்விக்கு ஒதுக்க வேண்டும் என, கடந்த, 20 ஆண்டாக, கூறி வருகிறோம்; ஆனால், இரண்டு சதவீதம் கூட எட்டப்படவில்லை. இது நாட்டின் வளர்ச்சிக்குத் தடைக்கல்லான விஷயம்.