திருப்பூர்:''நந்தி என்பது தர்மத்தின் அடையாளம்; எந்தவொரு மதத்தின் அடையாளம் அல்ல,'' என பெங்களூரு வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் தெரிவித்துள்ளார்.
பார்லிமென்ட் திறப்பு விழா மற்றும் செங்கோல் ஸ்தாபிதம் குறித்து அவர் கூறியதாவது:
சிறப்பு மிக்க பாரத தேசத்தில் புதிய பார்லிமென்ட் கட்டடம் சீரும் சிறப்புமாக திறக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் போது வழங்கிய செங்கோலில் தர்மத்தின் அடையாளமான நந்தி இடம் பெற்றுள்ளது.
அருங்காட்சியத்தில் இருந்த செங்கோல் புனரமைக்கப்பட்டு தற்போது புதிய பார்லிமென்ட் அரங்கில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது சிறப்புக்குரியது.
சிறப்பு பூஜைகளுடன் தமிழகத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஆதினங்களும் பங்கேற்றது தமிழகத்துக்கு பெருமையான விஷயம்.
லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை ஸ்தாபித்த நாள் இந்தியாவின் மிக முக்கியமான நாளாகும். குறிப்பாக நந்தி என்பது தர்மத்தின் அடையாளம்; எந்தவொரு மதத்தின் அயைாளம் அல்ல. நீதி நெறியில் அடையாளமாக விளங்குவது நந்தி. தர்ம சொரூப நந்தி அடையாளத்தை மக்கள் ஏற்க வேண்டும்.
முதன்முறையாக பார்லிமென்டில் தேவாரம் மற்றும் திருவாசக பாடல் பாராயணம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி இந்தியாவின் சரித்திரத்தில் இடம்பெறும்.
ஜெர்மனியில் நடக்கும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள, வாழும்கலை நிறுவனர் ஸ்ரீரவிசங்கர் குருஜி பார்லிமென்ட் விழா குறித்து, தருமபுரம் ஆதினத்திடம் கேட்டறிந்தார். தமிழக ஆதினங்களை அழைத்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.