சேத்தியாத்தோப்பு அருகே நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக என்.எல்.சி., ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்து வேலையில்லா இளைஞர்கள் வைத்துள்ள பேனரால் பரபரப்பு நிலவியது.
கடலுார் மாவட்டத்தில், நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவனம், இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக கத்தாழை, கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஊ.ஆதனுார், வி.சாத்தப்பாடி, மும்முடிசோழகன் உள்ளிட்ட 7 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு கையகப்படுத்திய நிலங்களில் வாய்க்கால் வெட்டும் பணியை செய்து வரும் என்.எல்.சி., மக்களுக்கான வாழ்வாதாரம் வேலைவாய்ப்பு, மாற்று குடியிருப்பு, புதிய குடியமர்வு திட்டம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் ஏற்படுத்தி தரவில்லை.
விவசாய நிலங்களை வாழ்வாதாரமாக கொண்டுள்ள இளைஞர்கள், நிலத்தை கையகப்படுத்தும் என்.எல்.சி., நிறுவனம் வேலை தரும்; வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர்.
ஆனால், என்.எல்.சி., நிறுவனம் நிலங்களை கொடுக்கும் விவசாயிகள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எவ்வித வேலை வழங்காமல் அதிரடியாக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த இளைஞர்கள் மன வேதனையில், நிலங்களை என்.எல்.சி.,க்கு தாரை வார்க்க துடிக்கும் ஏஜெண்டுகள், ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர், வருவாய் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வேலையில்லா இளைஞர்கள் என, கரிவெட்டி கிராம நுழைவாயிலில் பேனர் வைத்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.