மஞ்சள் சாமந்தி பூ விலை வீழ்ச்சியால், சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மஞ்சள் நிற சாமந்தி பூ கோவில் மற்றும் வீடுகளில் நடக்கும் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கும் மாலைகள் கட்ட அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.
சாமந்தி பூ தேவை அதிகரிப்பால், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி, எ.வடக்குப்பம், விஜயமாநகரம், ஆலடி, குருவன்குப்பம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாமந்தி பூ செடிகளை சாகுபடி செய்துள்ளனர்.
அறுவடை செய்யும் பூக்களை விருத்தாசலம், உளுந்துார்பேட்டை, பண்ருட்டி சுற்றுவட்டார பூ கடைகளுக்கு நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
கடந்த மாதம் ஒரு கிலோ சாமந்தி பூ 30 முதல் 50 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஏக்கருக்கு 200 முதல் 300 கிலோ பூக்கள் அறுவடை செய்யப்படுகிறது. வழக்கத்தை விட நடப்பாண்டு 3 மடங்கு விளைச்சல் அதிகரித்துள்ளது. வியாபாரிகள் தற்போது பூக்களை 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து சின்னவடவாடி விவசாயி வேல்முருகன் கூறுகையில், 'நடப்பாண்டு சாமந்தி பூ மகசூல் அதிகரித்துள்ளது. வியாபாரிகள் உரிய விலை கொடுத்து வாங்க முன்வராததால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஒரு ஏக்கர் சாமந்தி பூ சாகுபடி செய்ய ஆட்கள் கூலி, உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றிற்கு 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. விலை வீழ்ச்சியால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்றார்.