தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. இவற்றை விரைவாக கையகப்படுத்தி, அரசின் புதிய திட்டங்களுக்குப் பயன் படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களை பாதுகாக்கும் மிக முக்கியப் பொறுப்பு, வருவாய்த்துறையின் கீழ் செயல்படும், நில நிர்வாக ஆணையரகத்துக்கு உள்ளது.
ஆனால் இந்த அலுவலகம், பெயரளவிலேயே செயல்பட்டு வந்தது. 2021 ஜூனில் நில நிர்வாக ஆணையராக நாகராஜன் நியமிக்கப்பட்ட பின்பே, இந்த அலுவலகத்தின் செயல்பாடும், அதிகாரமும் வெளியுலகிற்குத் தெரியவந்தது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வனங்களை ஒட்டியிருந்த தனியார் நிலத்தை, வன நிலமாக அறிவித்து, யானை வலசைப் பாதைகளை பாதுகாத்தது, முதல் சிறப்பு நடவடிக்கையாக இருந்தது. அதன்பின், தமிழகம் முழுவதும் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமாக, 30 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 70 ஆண்டுகள் என குத்தகைக்கு விடப்பட்டு, மீட்கப்படாமலிருந்த நிலத்தை மீட்கும் பணி துவங்கியது.
இது தொடர்பான வழக்குகள் துாசி தட்டப்பட்டு, முடிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. நீண்ட காலமாக வழக்கைக் காரணம் காட்டி, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பலரும் அனுபவித்து வந்ததும், கோடிகளில் சம்பாதித்ததும் தெரியவந்தது. இவற்றில் பெரும்பாலான நிலத்துக்கு குத்தகை, வாடகைத் தொகையும் செலுத்தப்படாமல் இருந்ததும் கண்டறியப்பட்டது.
ஆயிரம் கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு!
இதில், சென்னை அண்ணா மேம்பாலம் அருகில், கதீட்ரல் ரோட்டிலிருந்த 6.6 ஏக்கர் (120 கிரவுண்ட்) நிலம் தொடர்பான வழக்கு (W.A.No.2678 of 2022) மிக முக்கியமானதாகும். இந்த வழக்கில் தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
தோட்டக்கலைச்சங்கம் என்ற தனியார் அமைப்பின் மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடியாகி, ரூ.1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம், மீண்டும் அரசு வசமாகியுள்ளது.
அடுத்ததாக ஆரணியில் லயன்ஸ் கிளப் வசமிருந்த நிலம் தொடர்பான வழக்கிலும், (W.P.No.24666 of 2017 and W.M.P.No.26028 of 2017) குத்தகை வாடகை நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற லயன்ஸ் கிளப் மனுவும், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அங்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னையின் மிக முக்கியப் பகுதியான கிண்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப் வசமிருந்த 60 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கிலும், (W.P.Nos.29644 to 29646 of 2017) அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.
இந்த இடத்துக்கு, கிளப் கோரியிருந்த திருத்தப்பட்ட வாடகை பாக்கியான 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாயை ஒரு மாதத்துக்குள் செலுத்துமாறு, கடந்த மார்ச்சில் ஐகோர்ட் உத்தரவிட்டது.
புதிய தலைமைச் செயலகம்!
தவறும்பட்சத்தில் இந்த இடத்தை காலி செய்து, தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் கிளப் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு, ஜூன் 20ல் வழக்கு விசாரணை நடக்கவுள்ளது.
அதிலும் அரசுக்கு வெற்றி கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடம் மீட்கப்பட்டால், அங்கு புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என்று, சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு, ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிகமாகும்.
சென்னை சத்யா ஸ்டூடியோ வழக்கிலும் (W.P.No.30167 of 2008 & W.M.P.No.9316 of 2023) ரூ.300 கோடி குத்தகைத் தொகையை செலுத்துமாறு, சத்யா ஸ்டூடியோ நிர்வாகத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கிரீன்வேஸ் ரோட்டை துர்காபாய் தேஷ்முக் சாலையுடன் இணைக்கும் இணைப்புச் சாலையை, தமிழ்நாடு இசைக் கல்லூரி வழியாக இணைக்கும் பணியைச் செய்து, மெரினா பீச் ரோடு, அடையாறு ஆகிய இடங்களில் உள்ள நெரிசலைக் குறைக்குமாறும், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
பாண்டியனின் ராஜ்ஜியத்தில்...
அதேபோன்று, மதுரை அழகர் கோவில் ரோட்டிலுள்ள பாண்டியன் ஓட்டல் இடம் தொடர்பான வழக்கிலும் (W.P.No.7890 of 2015 and M.P.No.1 of 2015 and W.M.P.No.12726 of 2016) அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
ஒரு மாதத்துக்குள் ஓட்டலை அகற்றி, குத்தகைக்குத் தரப்பட்ட அரசு நிலத்தை மீட்குமாறு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு, ரூ.300 கோடிக்கும் அதிகமாகும். அதேபோன்று, அரியலுாரில் 'அல்ட்ரா டெக்' சிமென்ட் நிறுவனம் அமைந்துள்ள, அரசு நீர்நிலை 50 ஏக்கர் இடம் தொடர்பான வழக்கிலும், (W.A.No.214 of 2023 and C.M.P.Nos.2132, 2134 & 2139 of 2023) அரசுக்குச் சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இவ்வழக்கிலும் இந்த நிறுவனம் தொடர்ந்த ரிட் மனு மற்றும் மேல் முறையீட்டு மனு தள்ளுபடியானதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், அரசு வசமாகியுள்ளது.
ஊட்டி ரேஸ்கோர்ஸ், கோவை ஜென்னிஸ் கிளப் ஓட்டல் அமைந்துள்ள இடம் தொடர்பான வழக்குகளையும் விரைவாக முடிப்பதற்கு, நில நிர்வாக ஆணையர் அலுவலக அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் இந்த நடவடிக்கைகளை மேலும் முடுக்கி விடுவதோடு, இந்த இடங்களை முழுமையாக விரைவாகக் கையகப்படுத்தி, மக்களுக்குப் பயனளிக்கும் புதிய திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டுமென்பதே, தமிழக மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு.
-நமது சிறப்பு நிருபர்-