ஈரோடு: திட்டம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அத்திக்கடவு திட்டத்தில் உபரி நீர் எடுப்பது எப்படி? என்று, விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வேளாண் குறைதீர் கூட்டம், ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சந்தோஷினி
சந்திரா முன்னிலை வகித்தார்.
இதில் விவசாயிகள், பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசியதாவது:
ஆந்திரா, கர்நாடகா போல் தமிழகத்திலும், அரசே மஞ்சளுக்கு விலை நிர்ணயம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டும்.
சர்வேயர் பற்றாக்குறையால் நில அளவீடு பாதித்துள்ளது. அத்திக்கடவு-அவினாசி திட்டப்பணி முடிந்து வரும், 12ல் முதல்வர் திறக்க உள்ளதாக அறிந்தோம்.
இத்திட்டத்தில் மழை காலத்தில் உபரி நீர் எடுக்கலாம். ஆனால், வறட்சியின் போதும், பிற குளம், ஏரிகள் நிரம்பி வரும்போது எந்த உபரி நீர் எடுக்கப்படும் என்பதை தெரிவித்து திறப்பு விழா நடத்த வேண்டும். கொடிவேரி அருகே மிகப்பெரிய தனியார் பிராசசிங் மில், விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. நீர் நிலைகளை பாதிக்கும்படி
அமைவதால், அனுமதிக்ககூடாது.
அந்தியூர், பர்கூர் பகுதியில் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கும் முன், மக்கள் கருத்து கேட்க வேண்டும். மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட உரங்கள், பூச்சி மருந்து விற்கக்கூடாது.
கீழ்பவானியில் பழைய, பழுதடைந்த கட்டுமானங்களை மட்டும் சீரமைக்க வேண்டும். வேளாண் துறை, தோட்டக்கலை துறை அதிகாரிகள் களப்பணிக்கு வருவதில்லை. மரவள்ளி கிழங்கை தாக்கும் நோயால், விவசாயிகள் சிரமப்படுவதை தடுக்க வேண்டும். சாய, சலவை உள்ளிட்ட எந்த வகை ஆலையாக இருந்தாலும், நீர் நிலைகளில் இருந்து, 5 கி.மீ.,க்குள் அமைக்க கூடாது. இவ்வாறு அவர்கள் பேசினர்.