ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது.
இதில் தி.மு.க., கவுன்சிலர்கள் பேசியதாவது: மாநகராட்சியின் பல்வேறு இடங்களில், 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது.
ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
பெரும்பாலான இடங்களில், திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்படவில்லை. பாதாள சாக்கடை குழாய்களில், அடிக்கடி குளறுபடி ஏற்படுவதை சரி செய்ய வேண்டும். பேபி கால்வாய்களில் தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் நிலவும் அடிப்படை சிக்கல்களை தீர்க்க, குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் கம்பம் நடுவதற்காக தோண்டப்பட்ட குழிகளை முறையாக மூடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.
விரைவில் கியூ.ஆர்.கோடு
மக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், 45வது வார்டில் மட்டுமே கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மாநகராட்சி முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என கமிஷனர் ஜானகி ரவீந்திரன் கூறினார்.
மேலும், மாநகராட்சி பகுதிகளில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில், 261 கிலோ மீட்டர் துாரத்துக்கு இன்னும் குழாய்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளது என்றார்.
மண்டல கூட்டம் நடத்தாதது ஏன்?
தமிழகத்தில் பிற மாநகராட்சிகளில், மண்டல வாரியாக கூட்டம் நடக்கிறது. ஆனால், ஈரோடு மாநகராட்சியில் நடப்பதில்லை என்று, தி.மு.க., - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். 'போதிய நிதியில்லை' என்று கமிஷனர் பதில் அளித்தார்.
இதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக்கூறி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
35 தீர்மானம் நிறைவேற்றம்
ஈரோடு மாநகராட்சி கூட்டம், மேயர் நாகரத்தினம் தலைமையில் நேற்று நடந்தது. துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
24 வது வார்டில் செயல்பட்டு வரும் நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துதல், மண்டலம் 1ல் சேகரிக்கப்படும் குப்பையை, நுண் உரமாக்கி பாக்கெட் அச்சிடுதல் மற்றும் உரம் பகுப்பாய்வு பணிக்கு கட்டணம் செலுத்த அனுமதி வழங்குதல், மண்டலம் 2ல், பொது சுகாதார பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு, மாணிக்கம்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்குதல், மாநகராட்சி அலுவலக பயன்பாட்டுக்கு புதிய ஐந்து வாகனங்களை வாங்குவதற்கான செலவினத்தை, பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி வழங்குதல் என்பன உள்பட, 35 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.