ஈரோடு: வருவாய், போலீஸ், டாஸ்மாக், கலால் துறையினர் பங்கேற்ற, ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது.
இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி மது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மது, கள்ளச்சாராயம் குறித்த புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
இப்புகாரை, 10881, மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., - 94429 00373 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் விபரம் ரகசியம் காக்கப்படும். மாவட்டத்தில் வரப்பாளையம், ராயபாளையம், கடத்துார், நம்பியூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டாஸ்மாக் கடையில், வேலை நேரத்தை தவிர்த்து கூடுதல் நேரம் விற்பனை செய்ததாக, 122 வழக்கு, பிற மாநிலங்களில் இருந்து மது எடுத்து வந்ததாக, ஏழு வழக்கும் பதிவாகி, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பேசினார்.
டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா, பயிற்சி உதவி கலெக்டர் பொன்மணி, ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், டி.எஸ்.பி.,க்கள் ஆறுமுகம், ஜெயபால், பவித்ரா, ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.