ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ராசாம்பாளையம், எஸ்.எஸ்.பி.நகரில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை இல்லை. இங்கு வசிக்கும் வயதான தம்பதியினர், பல ஆண்டாக சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வீட்டுக்கு வருவோர், மது அருந்திவிட்டு அக்கம்பக்கம் வீட்டு வாசலில் அலங்கோலமான நிலையில் படுத்து கிடக்கின்றனர். சிலர் வாந்தியும் எடுக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் வெளியே நடமாட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த, 20 பெண்கள் உள்ளிட்ட, 30 பேர் நேற்று ஒன்று சேர்ந்து, வயதான தம்பதி வீட்டுக்கு நேற்று சென்றனர். இனி மது விற்பனையில் ஈடுபடக்கூடாது என்று கூறினர். ஆனாலும் மது விற்பனையை தொடர்ந்ததால், எஸ்.பி.பி.நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீரப்பன்சத்திரம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சண்முகம், மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறவே, மறியலை கைவிட்டனர். இதை தொடர்ந்து வயதான தம்பதி வீட்டுக்கு சென்று, போலீசார் சோதனை செய்தனர். வீட்டில் ஏழு மது பாட்டில்களை பறிமுதல் செய்து, மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.