ஈரோடு: ''மலைப்பகுதியில் வசிப்போருக்கு எஸ்.டி., சான்று உள்ளிட்ட சான்று வழங்க, சிறப்பு முகாம் நடத்தப்படும்'' என, டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தெரிவித்தார்.
ஈரோட்டில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் வேளாண் குறைதீர் கூட்டம் நடந்தது. மலைவாழ் மக்கள் நலச்சங்கம் குணசேகரன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்கு எஸ்.டி., சான்று, இருப்பிட சான்று, வருவாய் சான்று தேவைப்படுகிறது. இச்சான்றுக்கு விண்ணப்பித்தால், பல்வேறு பரிசீலனைக்கு பிறகு வழங்க, ஆறு மாதம் கூட ஆகிறது. இதனால் இப்பகுதி மாணவர்களின் கல்வி பாதிக்கிறது என்றார்.
டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா கூறியதாவது: மலைப்பகுதியில் எஸ்.டி., சான்று வழங்க கோபி ஆர்.டி.ஓ., தலைமையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மலை கிராமத்தில் முகாம் அமைத்து, அங்கேயே சான்று, ஆவணங்கள் பெற்று பரிசீலிக்கின்றனர். அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்காமல் ஆர்.டி.ஓ.,வே நேரடியாக விசாரித்து, ஆவணம் பெறுவதால் விரைவாக எஸ்.டி., சான்று, இருப்பிடம், வருவாய் சான்று வழங்கப்படுகிறது. தற்போதைய கல்வி ஆண்டை கருதி கூடுதல் முகாம் நடத்தி தேவையானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். சென்னிமலையை தலைமையிடமாக வைத்து, தாலுகா அமைக்க, அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.