ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில் ரவுடியை, மற்றொரு ரவுடி கும்பல், கத்தியால் குத்தி கொலை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், ஜான்சி நகர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 29; நேற்று மதியம், 3:30 மணியளவில், கனிராவுத்தர் குளத்தில் இருந்து பி.பெ.அக்ரஹாரம் செல்லும் சாலையோரம், நான்கு பேர் கும்பல் கத்தியால் நெஞ்சு பகுதியில், சரமாரியாக குத்தி விட்டு ஓடியது.
வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடம் சென்றபோது, சந்தோஷ் சடலமாக கிடந்தார். உடலை மீட்ட போலீசார், நேரடி விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த ஜின்னா, 30, என்பவருடன், சந்தோஷூக்கு முன் விரோதம் இருந்துள்ளது. டாஸ்மாக் பாரில் மது குடித்து விட்டு வந்தவரை வழிமறித்து, ஜின்னா தலைமையிலான நான்கு பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஜின்னா, சூரி கத்தியால் சந்தோஷின் நெஞ்சு பகுதியில் குத்தியதில் சம்பவ இடத்தில் இறந்தார். கொலைக்கு பயன்பட்ட சூரிகத்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், பணம் பறித்தல் வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்கு உள்ளது.
சந்தோஷின் தம்பிகளான அழகிரி, லோகேஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் அழகிரி சிறையில் உள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.