பவானி; பவானி--மேட்டூர் தேசிய நெடுஞ்சாலையில், சிங்கம்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், பவானியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பவானி தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில தலைமை ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் சோதி குமரவேல், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை பேசினர்.
ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் மாநில நெடுஞ்சாலை, 85 கி.மீ., தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டு, விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.
நான்கு வழிச்சாலையாக இல்லாமல், இருவழிச் சாலையாக மட்டுமே தரம் உயர்த்தப்படும் நிலையில், சிங்கம்பேட்டையில் கட்டண சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சுங்கச்சாவடி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், பவானி நகர பொறுப்பாளர் ரகுமான், வடக்கு மாவட்ட பொருளாளர் வினோத்குமார், பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்க இணை செயலாளர் ராமலிங்கம், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.