வெள்ளகோவில் அருகே
பெண் சடலம் மீட்பு
வெள்ளகோவில் அருகே ராகுவையன் வலசில், பூவாத்தாள் என்பவருக்கு சொந்தமான காடு உள்ளது. இங்கு, 65 வயது மதிக்கதக்க பெண் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. உடல் அழுகிய நிலையில் கிடந்தது. கோவை அரசு மருத்துவ மனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.
வருவாய் துறை ஆர்ப்பாட்டம்
மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரை, தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர் மிரதாக்கியதை கண்டித்து, தாராபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டக் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாங்கினார். வருவாய் ஆய்வாளரை தாக்கிய ஊராட்சி தலைவர் உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தினர். தாசில்தார் ஜெகஜோதி உள்பட பலர் பங்கேற்றனர்.
மாணவி விபரீத முடிவு
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 43; வெள்ளகோவிலில், செம்மாண்டம்பாளையம் ரோட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். கட்டட வேலை செய்து வருகிறார். இவரின், 17 வயது மகள் பிளஸ் ௧ முடித்துவிட்டு, பிளஸ் ௨ செல்லவிருந்தார். அடிக்கடி செல்போன் பார்த்து வந்ததால், மாணவியை பெற்றோர் கண்டிதுள்ளனர். இதனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் துாக்கிட்டு கொண்டார். பெற்றோர் மாணவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் மாணவி இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் பறித்த
'மப்பு' கும்பல் கைது
ஈரோட்டில், வட மாநில ஓட்டல் தொழிலாளியை தாக்கி, மொபைல் போன் பறித்த, ௬பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த, 36 வயது ஆசாமி, ஈரோட்டில் ஞானபுரம் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில், ஒரு ஓட்டலில் வேலை செய்கிறார். இவரிடம் ஆறு பேர் கும்பல், மொபைல் போனை பறித்து தாக்கினர். இதை கண்ட ஓட்டல் உரிமையாளர், அப்பகுதியினர் வரவே, கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்த புகாரின்படி, எல்லப்பாளையம், ஆயப்பாளி சந்தோஷ், 26, கிருஷ்ணமூர்த்தி, 24, ஈரோடு காளை மாட்டு சிலை, தீயணைப்பு நிலையம் பகுதி அஜித்குமார், 24, பாரத், 20, குணசேகரன், 25, சென்னிமலை ரோடு ஜெகதீஷ், 27, ஆகியோரை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
மனைவி மாயம்; கணவன் புகார்
தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 35; காற்றாலை நிறுவன ஊழியர். இவரின் மனைவி பிரியா, 30; தான் வேலைக்கு செல்வதாக பிரியா கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டில் இருந்து பிரியா மாயமாகி விட்டார். தாராபுரம் போலீசில், சுரேஷ்குமார் புகாரளித்துள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.
அய்யனாரப்பனுக்கு
தீர்த்தக்குட ஊர்வலம்
அம்மாபேட்டையை அடுத்த ஆணைக்கவுண்டனுாரில், பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோவிலில் கும்பாபிஷேக விழா ஜூன், ௨ல் நடக்கவுள்ளது. இதையொட்டி ஊர்மக்கள், பக்தர்கள் அம்மாபேட்டை காவிரி ஆற்றுக்கு சென்று, நேற்று தீர்த்தம் எடுத்து, அக்னி மாரியம்மன் கோவிலுக்கு வைத்தனர். அங்கிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். இதில், 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்சரில் வந்து ஆடு
திருடிய 2 பேர் கைது
நம்பியூரை அடுத்த கெடாரை பகுதியில், வரப்பாளையம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம் மங்களம், கணபதிபாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் 23; சேவூர், குருமம்பாளையம், மங்களம் கோவில் வீதி அஜித்குமார், 21, ஆகியோர் பல்சர் பைக்கில் ஆட்டுடன் சென்றனர்.
இருவரிடமும் விசாரித்ததில், நம்பியூர் அருகே மலையப்பாளையத்தில், வேலுச்சாமி என்பவர் ஆட்டை திருடி செல்வது தெரிந்தது. டூவீலர், ஆட்டுடன் இருவரையும் கைது செய்த போலீசார், கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
பஸ் ஸ்டாண்டில் சடலம்
தெரிந்தது அடையாளம்
பெருந்துறை புது பஸ் ஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டேண்ட் அருகில், நேற்று முன்தினம் ஒருவர் இறந்து கிடந்தார். பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, வள்ளுவன் வீதியை சேர்ந்த ரமேஷ், 37, என தெரிந்தது. இவரின் மனைவி ரதி, 37; ஆறு மாதத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு சென்று செலவுக்கு பணம் தருவாராம். ஒன்றரை ஆண்டாக வீட்டுக்கு செல்லாத நிலையில் இறந்து கிடந்தார். அவர் சாவுக்கான காரணம், உடற்கூறு பரிசோதனைக்குப் பிறகே தெரிய வரும் என்றும், போலீசார் தெரிவித்தனர்.
விளக்கு பற்ற வைத்த
கல்லுாரி மாணவி சாவு
சேலம், காமக்காபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ரவி மகள் தரணி, 19; பெருந்துறை, கள்ளியம்புதுார் சாலையில் வீடு எடுத்து தங்கி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மருத்துவ ஆய்வக தொழில் நுட்பம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
கடந்த, 20ம் தேதி மாலை, பெருந்துறையில் வீட்டில் சாமி கும்பிட விளக்கு பற்ற வைக்க, தீப்பெட்டியை உரசிய போது, நைட்டியில் தீப்பற்றிக் கொண்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி, நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
வணிக வரித்துறை
அலுவலர் ஆர்ப்பாட்டம்
வணிக வரித்துறை அலுவலர் மற்றும் பணியாளர் சங்கம் சார்பில், ஈரோட்டில் மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள, வணிக வரித்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். சட்டசபையில் அறிவித்தபடி மாநிலம் முழுவதும் துணை வணிக வரி அலுவலர்களை நியமிக்க வேண்டும். இளநிலை உதவியாளர்களுக்கு பருவ நிறைவு ஆணை வழங்க வேண்டும். தேவையற்ற அறிக்கைகளை குறைக்க வேண்டும். அதிகப்படியான வருவாய் இலக்கு நிர்ணயம் செய்வதை கைவிட வேண்டும், என்பது உட்பட பல கோரிக்கையை வலியுறுத்தினர்.
பச்சமலையில்
வைகாசி விசாகம்
கோபி பச்சமலை முருகன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா, லட்சார்ச்சனையுடன் நேற்று துவங்கியது. இதில், 100 கிலோ வில்வ இலையை கொண்டு, மூலவர் மற்றும் உற்சவருக்கு, லட்சார்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று முதல் ஜூன்1ம் தேதி வரை தினமும் லட்சார்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. ஜூன், 2ல் மூலவருக்கு, 108 லிட்டர் பால் ஊற்றி தாராபிஷேகம் நடக்கிறது.
ஆசிரியர்கள் பொது
மாறுதல் கலந்தாய்வு
ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆன்லைனில் நேற்று நடந்தது. இதில் பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் பங்கேற்றனர். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வுக்கு, 274 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆன்லைனில் கலந்தாய்வு நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி கல்வி துறை செய்திருந்தது.
ஓடும் ரயிலில்
மூதாட்டி சாவு
ஈரோடு, டீச்சர்ஸ் காலனி, ராஜாசெல்வி இல்லத்தை சேர்ந்த ஞானேஸ்வரன் மனைவி மீனா, 68; ஐதராபாத்தில் இருந்து ஈரோடுக்கு சபரி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் பயணித்தார். கடந்த, 29ம் காலை சேலம் - ஈரோடு இடையே ரயில் சென்றபோது பாத்ரூம் சென்றார். திரும்பாத நிலையில் சக பயணிகள் அவரை மீட்டனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன், தயாராக இருந்த மருத்துவ குழுவினர், மூதாட்டியை பரிசோதனை செய்தனர். இதில் அவர் இறந்தது தெரியவந்தது.
* ஈரோடு-காவிரி ரயில்வே ஸ்டேஷன் இடையே, 30 வயது மதிக்கதக்க வாலிபர் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று, ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
தெரு நாய்களுக்கு
கு.க., ஆப்ரேஷன்
கோபி நகராட்சி சார்பில், தெருநாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. டவுனுக்குள் எந்நேரமும் சுற்றித் திரிந்து, மக்களை அச்சுறுத்தி வந்த தெருநாய்களை, வலை கொண்டு நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். இந்த வகையில் பிடிபட்ட, 298 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில்
வைகாசி விசாக தேரோட்டம்
ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக தேரோட்டம், வெகு விமரிசையாக நடந்தது.
ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், நடப்பாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா, கடந்த, 23ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆருத்ர கபாலீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில்
எழுந்தருளினார். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, துணை மேயர் செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் சிவகுமார் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக சென்று மாலையில் நிலை சேர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தை ஒட்டி, சாலையில் குறுக்கே செல்லும் மின் கம்பிகளை, மின் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அகற்றினர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டேங்க் அமைக்காததை
கண்டித்து சாலை மறியல்
அந்தியூர் அருகே சின்னதம்பிபாளையம் பஞ்., அந்தியூர் காலனியில், 50க்கும் மேற்பட்டோர், மலைக்கருப்புச்சாமி கோவில் - தவிட்டுப்பாளையம் சாலையில், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கிருந்த சேதமான மேல்நிலை தொட்டியை அகற்றினர். அதே இடத்தில் சின்டெக்ஸ் டேங்க் அமைப்பதாக பஞ்., அதிகாரிகள் கூறினர். ஆறு மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. வாக்குறுதி தந்தபடி டேங்க் அமைத்து தரவேண்டும். இவ்வாறு கூறினர். இதை தொடர்ந்து அதிகாரிகளிடம் போலீசார் பேசினர்.
அவர்கள் தெரிவித்தபடி விரைவில், சின்டெக்ஸ் டேங்க் அமைத்து, குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறவே, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.