ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவர் வினோத்குமார்.
இவர், ஆசிரியைகள் மற்றும் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் முறைகேடு செய்ததாகவும், 2020ல், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, ஆசிரியர் வினோத்குமாரை 'சஸ்பெண்ட்' செய்தனர்.
மேலும், கக்கதாசம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
அதேபோல், அந்தேவனப்பள்ளி பள்ளியில் பணியாற்றி வந்த பட்டதாரி ஆசிரியரும், வினோத்குமாரின் மனைவியுமான ஹேமா, பொறுப்பு தலைமை ஆசிரியையாக இருந்த போது, பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதனால் அவர் டி.சூளகுண்டா கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.
ஆனால் அவர், இடமாறுதல் உத்தரவைப் பின்பற்றாமல், அந்தேவனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே பணியாற்றி வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மே 27ம் தேதி நடந்த பட்டதாரி ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வில், ஆசிரியர் வினோத்குமார் பங்கேற்று, அந்தேவனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இடமாறுதல் பெற்றுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள், அந்தேவனப்பள்ளி ஊராட்சித் தலைவர் அரவிந்தன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சரயு மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.
அத்துடன், வினோத்குமார் இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாணவ, மாணவியரை பள்ளிக்கு அனுப்பாமல், போராட்டம் நடத்துவோம் என பெற்றோர் அறிவித்துள்ளனர்.
மேலும் சில பெற்றோர், சென்னையில் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர்.