வீரபாண்டி:நெய்க்காரப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 15 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டும் பணி துவங்கியுள்ளது.
சேலம் - கோவை நான்கு வழிச்சாலையில் பட்டர்பிளை - உத்தமசோழபுரம் மேம்பாலங்கள் இடையே நெய்க்காரப்பட்டி பிரிவு சாலை உள்ளது. அந்த வழியாக நெய்க்காரப்பட்டியில் இருந்து கொண்டலாம்பட்டிக்கு சென்று வரும் வாகனங்கள், நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் அந்தச் சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 15 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்ட ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலை அகலப்படுத்தப்பட்டு தார்ச் சாலையாக மாற்றப்பட்டது. புது பாலம் கட்டும் பணிக்கு, நான்கு வழிச்சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. தற்போது, நெய்க்காரப்பட்டி சந்திப்பில் நவீன இயந்திரங்கள் உதவியுடன் பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது.
இங்கு, 30 மீ., அகலம்,600 மீ., நீளத்தில் மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இதன் நடுவே கீழ்பகுதியில் சர்வீஸ் சாலை, நான்கு வழிச்சாலையில் எதிர் எதிரே உள்ள சாலைகள் வழியே வரும் வாகனங்கள் கடந்து செல்ல பாதை அமைக்கப்படும்.
இந்தப் பாலத்தை ஓராண்டில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.