சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை, சர்வதேச தரத்தில் மாற்றும் வகையில், வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மீண்டும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.
விம்கோ நகர் முதல் சென்னை விமானம் நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என, இரண்டு வழித்தடங்களில், சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது.
தற்போது, 69 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பில், 118.9 கி.மீ., நீளத்திற்கு இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
12 இடங்களில்
இதில், மெட்ரோ ரயில் நிலையங்களுடன், அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் இணைக்கும் வகையில், 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற, போக்குவரத்து முனையங்கள் அமைக்கும் பணியை, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்தில், கிண்டி மற்றும் வண்ணாரப்பேட்டையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 12 இடங்களில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை, ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக மாற்ற, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதில், பேருந்து நிலையம், வணிக வளாகம், வாகன நிறுத்த வசதிகளுடன், 'மல்டி மாடல்' முறையில் அமைக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, தனியார் ஆலோசகரை தேர்வு செய்வதற்காக, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. 'ஆலோசகர் தேர்வு செய்யப்பட்டு, விரைவில் பூர்வாங்க பணிகள் துவங்கப்படும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரூ. 900 கோடி
இதற்கிடையே, மூன்றாண்டுகளுக்கு மேலாகவே, பிராட்வே பேருந்து நிலையத்தை, சர்வதேச தரத்தில் உயர்த்துவதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. அதற்கான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, 900 கோடி ரூபாய் மதிப்பில், 21 மாடிகள் உடைய வணிக வளாகத்துடன், பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
தரை தளத்தில் 53 பேருந்துகள், முதல் தளத்தில் 44 பேருந்துகள், இரண்டாம் தளங்களில், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
மேலும், திரையரங்கம், கடைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, பிராட்வே பேருந்து நிலைய பணிகளை, மாநகராட்சி மீண்டும் கையில் எடுத்துள்ளது. இப்போதாவது, பிராட்வே பேருந்து நிலையம், வணிக வளாக போக்குவரத்து முனையமாக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பிராட்வே பேருந்து நிலையத்தை, சர்வதேச தரத்தில் மேம்படுத்த மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால், இத்திட்டம் சாத்தியப்படாமல் இருந்தது.
தற்போது, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் அல்லது வேறு வகையான நிதி ஆதாரங்கள் வாயிலாக செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த பின், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இப்பணிகள் முடிக்கப்பட்டு, இம்மாத இறுதி அல்லது அடுத்தாண்டுகளில், வணிக வளாக போக்குவரத்து முனைய பணிகள் துவங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -