கிருஷ்ணகிரி:'மாணவி கடத்தல் தொடர்பாக, போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை' என, மாணவியின் பெற்றோர், கிருஷ்ணகிரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனுஅளித்தனர்.
கிருஷ்ணகிரி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த, 14 வயது மாணவி, அப்பகுதி அரசு உயர்நிலைப்பள்ளியில்,ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
ஏப்., 20 இரவில், வீட்டருகே உள்ள கடைக்கு சென்றவர், மீண்டும் திரும்பவில்லை. அசோக் என்பவர் அவரை கடத்திச் சென்றதாக, மாணவியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
எனினும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, அந்த சிறுமியின் பெற்றோர்எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூரிடம் நேற்று புகார் அளித்தனர்.
புகாரில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி அடுத்த மாதிநாயனப்பள்ளியைச் சேர்ந்த அசோக் என்பவர், ஏற்கனவே மகளை கடத்திச் சென்றார். அவரிடமிருந்து மகளை மீட்டு வந்தோம். தற்போதும் கடத்தி சென்றுள்ளார்.
அவருக்கு திருமணமாகி, நான்காம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். எங்கள் மகள்,உயிருடன் உள்ளாரா என்ற சந்தேகம் உள்ளது. மகளை மீட்டு, கடத்தியவர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியுள்ளனர்.