தர்மபுரி:''தர்மபுரி திறந்தவெளி நெல் கிடங்கில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது தொடர்பாக, இரு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்,'' என, தர்மபுரிகலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
தர்மபுரியில் உள்ள திறந்தவெளி நெல் கிடங்கை ஆய்வு செய்த அவர் கூறியதாவது:
தர்மபுரி திறந்தவெளி நெல் கிடங்கில் இருந்து, 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்கள் வெளியாகின; அதற்கு வாய்ப்பில்லை.
விஜிலென்ஸ் அலுவலர்களின் சோதனையின்போது, நெல் மூட்டைகள் முறையாக அடுக்கி வைக்கப்படாமல் இருந்ததால், நெல் மூட்டைகள் குறைந்திருப்பதாக அவர்கள்தெரிவித்திருக்கலாம்.
தர்மபுரி திறந்தவெளி நெல் குடோனுக்கு, 22,273 டன் நெல் மூட்டைகள் வந்தன. இதில், இதுவரை, 7,179 டன் நெல் மூட்டைகள் மாவட்டத்திலுள்ள அறவை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள நெல்மூட்டைகளை அனுப்பும் பணி நடக்கிறது.
நெல் மூட்டைகள் அனைத்தும் மில்களுக்கு அனுப்பிய பின்பே, இது குறித்து தெரிய வரும்.
நெல் மூட்டைகள் மாயமானது தொடர்பாக, சென்னை நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர், தர்மபுரி நுகர்பொருள் வாணிபக் கழக குழுவினர், மில்களுக்கு அனுப்பப்பட்ட நெல் மூட்டைகள், அங்குள்ள இருப்பு, அரவை செய்யப்பட்ட நெல் ஆகியவை குறித்து தனித்தனியாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.