சேலம்:சேலம் அருகே ரவுடியை கொல்ல முயன்ற மற்றொரு ரவுடி, சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சிக்கிய ரவுடியின் குடும்பத்தினர், நான்கு பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம், அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் பிரபாகரன், 26, ரவுடி. அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் கொலை வழக்கில், பள்ளப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி ரவிக்குமார், 47, என்பவர் தான், போலீசுக்கு தகவல் கொடுத்து தன்னை சிக்க வைத்ததாகபிரபாகரன் சந்தேகப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிரபாகரன், பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவுடி யோகேஷ்வரன், 28, என்பவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரவிக்குமார் வீட்டுக்கு வந்தனர்.
வெளியே நின்றிருந்த ரவிக்குமாரிடம் பேச்சு கொடுத்தனர். ரவிக்குமார் தலையில் கத்தியால் வெட்டினர். சுதாரித்த ரவிக்குமார், யோகேஷ்வரனை சரமாரியாக வெட்டி கொன்று தப்பினார்.
காயம் அடைந்த ரவிக்குமார் மற்றும்பிரபாகரன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பாக, ரவிக்குமாரின் மனைவி நாகராணி, 45, மகன்கள் ராகுல், 24, பரத், 21, மேலும், 18 வயது சிறுவனிடம் பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.