ஈரோடு:ஈரோடில், பல பெண்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட கணவரை, 'ஆசிட்' ஊற்றியும், மரக் கட்டையால் அடித்தும், மனைவி கொலை செய்தார்.
ஈரோடு, கனிராவுத்தர் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 52; தறி பட்டறை தொழிலாளி. இவர் மனைவி பத்மா, 50. இவர்களது மகள் தீபா இறந்து விட்டார். மகன் சுரேஷ், திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.
கணவர் சுப்ரமணி, பல பெண்களுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, ஊதாரித்தனமாக சுற்றி வந்துள்ளார். வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுக்காமல் இருந்தார்.
இதுபற்றி பலமுறை பத்மா, தன் கணவனை கண்டித்தார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல், தன் செயலை அவர் தொடர்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இருவரும் துாங்க சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு எழுந்த பத்மா, வீட்டில் இருந்த பாத்ரூம் கழுவும் ஆசிட்டை சுப்ரமணியின் தலை, முகத்தில் ஊற்றினார்.
அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் மரக்கட்டையால் அவரது தலையில் அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
வீட்டை பூட்டிய பத்மா, வீரப்பன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் சென்று தகவல் தெரிவித்து, சரணடைந்தார்.
போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீரப்பன்சத்திரம் போலீசார், பத்மாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.