ராணிப்பேட்டை:சென்னை, அடையாரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமால், 44. இவரது அக்கா எழிலரசி, 47. இவர்களுடன், திருமாலின் மகன், இரு மகள்கள் உட்பட ஆறு பேர், அவரின் சொந்த ஊரான வேலுார் அடுத்த விரிஞ்சிபுரத்தில் உறவினர் இறப்புக்கு சென்றனர்.
'டொயோட்டா எடியாஸ்' காரில் சென்ற அவர்கள், அங்கிருந்து நேற்று மாலை சென்னை புறப்பட்டனர். காரை டிரைவர் அய்யப்பன், 32, ஓட்டினார்.
வாலாஜாபேட்டை அடுத்த குடிமல்லுார் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் கார் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் பழுதாகி நின்றிருந்த கன்டெய்னர் லாரி பின்புறம் மோதியது.
இதில், டிரைவர் அய்யப்பன், திருமால், எழிலரசி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வாலாஜாபேட்டை போலீசார் சடலங்களை மீட்டனர். விபத்தில் காயமடைந்த திருமாலின் குழந்தைகள் தருண், தரணிகா, தனுஷ்கா ஆகியோர், வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
முன்னால் சென்ற காரை முந்த முயன்றபோது, கன்டெய்னர் லாரி மீது மோதியதாக, வாலாஜாபேட்டை போலீசார் தெரிவித்தனர்.