மானாமதுரை : மானாமதுரை மற்றும் இளையான்குடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் முடங்கி கிடக்கும் சுப்பன் கால்வாய் திட்டத்தை பொதுப்பணித்துறையினர் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருமாஞ்சோலை வழியாக வரும் உபரி நீர் மானாமதுரை தாலுகாவிற்குட்பட்ட பெரிய கோட்டை, வேம்பத்தூர்,கள்ளர்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் மழைநீரோடு சேர்ந்து வேலூர் அருகே உப்பாறாக உருவெடுத்து வைகை ஆற்றில் கலக்கிறது.
இந்த நீரை மானாமதுரை பகுதியில் உள்ள செய்களத்தூர், மஞ்சிக்குளம், கல்குறிச்சி ஆலங்குளம் ,பனிக்கனேந்தல் வழியாக 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 50க்கும் மேற்பட்ட ஊரணிகள் நிரம்பிய பின்னர் இளையான்குடி பெரிய கண்மாயில் சேரும் வகையில் சுப்பன் கால்வாய் திட்டம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக சுப்பன் கால்வாய் திட்டம் முடங்கி கால்வாய்களில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் வைகை ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
சுப்பன் கால்வாய் மூலம் பயன் பெற்ற மானாமதுரை,இளையான்குடி பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சுப்பன் கால்வாய் அமைந்துள்ள பகுதிகளிலும்,வரத்து கால்வாய்களிலும் கருவேல மரங்கள், நாணல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது.
மேலும் சுப்பன் கால்வாய் தடுப்பணையில் உள்ள ஷட்டர்களும் சேதமடைந்துள்ளதாலும் மழைக்காலங்களில் வரும் மழைநீர் வைகை ஆற்றில் சென்று வீணாக கலக்கிறது.
ஆகவே பொதுப்பணித்துறையினர் மானாமதுரை, இளையான்குடி பகுதி விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக சுப்பன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.