முதுகுளத்தூர் : -முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ஷாஜகான் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். அலுவலக பணியாளர் ராஜேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.
முதுகுளத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுக்காமல் பணிகள் நடக்கிறது. இதனை கண்டித்து 2வது வார்டு கவுன்சிலர் பார்வதி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
தெருக்களில் கழிவுநீர் வடிகால், சாலை வசதி, தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கவுன்சிலர் சேகர்:முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் விவரம் குறித்து கேட்டார். இன்னும் காலதாமதம் செய்யாமல் கடைகளை திறக்க வேண்டும, என்றார்.
மோகன்தாஸ்: தெருக்களில் கழிவு நீர் கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை குறிப்பிட்ட நாளில் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடப்பதற்கே முகம் சுளிக்கின்றனர், என்றார்.
பேரூராட்சி தலைவர் ஷாஜகான் கூறுகையில், பஸ் ஸ்டாண்ட் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் இன்னும் முடிவுபெறாமல் உள்ளது.
பணிகள் முடிந்தவுடன் கடைகள் திறக்கப்படும்.தெருக்களில் சுத்தம் செய்யப்படும் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கவுன்சிலர்கள் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.