சிங்கம்புணரி பகுதியை பொறுத்தவரை சேவுகப்பெருமாள் கோயில் மாடுகளே 'சண்டியர்கள்'. இம்மாடுகள் மட்டுமே கடைவீதிகளில் சண்டித்தனம் செய்ய அய்யனார் அனுமதியும் தந்திருக்கிறார். இம்மாடுகளைத் தவிர்த்து சண்டித்தனம் செய்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருப்பது காலக்கண்ணாடியை கவனித்து வந்தவர்களுக்கு தெரியும்.
இக்காளைகள் எந்தக் கடைக்கு சென்றாலும் அவைகளுக்கு உரிய உணவுகளை வணிகர்கள் மகிழ்வுடன் கொடுத்து விடுவார்கள். அனைத்து வீடுகளிலும் இக்கோயில் காளைகளுக்கென்று உணவுகளை வழங்குவதற்கு தனியாக பாத்திரங்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். சண்டியர் காளைகளுக்கு மஞ்சுவிரட்டு காலங்களிலும் முதல் மரியாதை தான். சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் எங்கு மஞ்சுவிரட்டு நடந்தாலும் இக்கோயில் மாடுகளுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும்.
இக்கோயிலுக்கென்று ஆயிரம் கலம் நெல் அளவிற்கு கோவில் நிலங்களில் இருந்து திருக்கோவிலுக்கு வருமானம் வருகிறது. இக்கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட மாடுகள் 50 ஆயிரத்திற்கும் மேல் திரிகின்றன என்றாலும் தற்போது சில மாடுகளை மட்டுமே கோயில் ஊழியர்கள் பராமரித்து வருகின்றனர். சுற்று வட்டார மஞ்சுவிரட்டுகளுக்காக சேவுகப்பெருமாள் கோயில் மாடுகள் அழைப்பின் பேரில் முதல் நாளே அங்கு கொண்டு செல்லப்படும். இம்மாடுகளுக்கு முதல் மரியாதை அளிக்கப்பட்டு முதல் காளைகளாக அவிழ்த்து விடப்பட்ட பிறகே அந்த ஊர் கோயில் மாடுகளும் மற்ற மாடுகளும் அவிழ்த்து விடப்படும். மதுரை மாவட்டம் உறங்கான்பட்டி கிராமத்தில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் காளைக்கு என்று தனித் தொழுவமே கட்டிவைத்துள்ளார்கள்.