சிவகாசி : பில்லர் மட்டும் போட்டுவிட்டு பாலம் அமைத்ததாக பில் எடுக்கப்பட்டுள்ளது என தி.மு.க., கவுன்சிலர், மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் புகார் கூறினார்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ் பிரியா, கமிஷனர் சங்கரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ரேணு நித்திலா (தி.மு.க.,): ஐயப்பன் காலனியில் வாறுகால் அமைக்கப்பட வேண்டும். உழவர் சந்தை பகுதியில் அமைக்கப்பட்ட வாறுகால் பணி முறையாக நடைபெறவில்லை.
சசிகலா (தி.மு.க.,): உட்பட்ட அரசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாறுகால் வசதி இல்லை.
சேதுராமன் (தி.மு.க.,): மாநகராட்சியில் வாறுகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் வாக்கி டாக்கிக்காக ரூ. 20 லட்சம் ஒதுக்கப்பட்டு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. முதலில் அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
ஜெயராணி (தி.மு.க.,): வார்டில் ரேஷன் கடை கட்டப்பட்டும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
சாந்தி (அ.தி.மு.க.,): வார்டில் ஒரு மாதமாக வாறுகால் முறையாக துார்வார வில்லை. குப்பைகள் சேகரிக்க ஆட்கள் வரவில்லை.
இந்திரா தேவி (தி.மு.க.,): திருத்தங்கல் பேட்டை தெருவில் 2021 ல் பாலம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. பில்லர்கள் மட்டும் அமைக்கப்பட்டு, பாலம் போட்டதாக பில் எடுக்கப்பட்டு விட்டது.
மேயர்: இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படும். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.