மதுரை : மதுரை மாநகராட்சியில் மண்டல அளவில் வாரந்தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர் முகாமில் கொடுக்கப்படும் மனுக்களின் 'ஸ்டேடஸை'ஆன்லைனில் அறியும் வசதியை கொண்டுவர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் மண்டலங்களில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர், துணை மேயர், கமிஷனர், மண்டலத் தலைவர், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்பர். மக்கள் தரும் மனுக்களை பரிசீலித்து தீர்வு காண உத்தரவிடுவர்.பொதுவாக ரோடு, கழிவுநீர், குடிநீர், ஆக்கிரமிப்பு, சொத்து வரி தொடர்பாக மனுக்கள் அதிகளவில் வரும். அதன் மீதான நடவடிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதை அறியும் வசதி இல்லை. இதனால் மீண்டும், மீண்டும் மண்டல அலுவலகங்களுக்கு மக்கள் அலைய வேண்டியுள்ளது.
மாநகராட்சிக்கு 78716 61787என்ற எண்ணில் மக்கள் தெரிவித்த புகார்களின் நிலையை www.maduraicorporation.co.in இணையதளத்தில் அறியும் வசதி உள்ளது. ஒவ்வொரு புகாருக்கும் ஒரு எண் வழங்கப்படுகிறது.அதை வைத்து மனுவின் நிலையை அறியலாம். இப்பணியை மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் செய்கிறது.
இதே போல் இம்மையம்மூலம் குறைதீர் முகாம்களில் பெறும் மனுக்களின் 'ஸ்டேடஸ்' என்னவென்று இணையதளத்தில் அறியும் வசதி ஏற்படுத்த வேண்டும். மனுக்களை ஒருங்கிணைக்க தனி அலுவலரும் நியமிக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.