கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில், பொதுமக்களின் பிரச்னை தொடர்பான 50 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் நிலையங்களில், புகார்கள் மீது முறையான தீர்வு மற்றும் நடவடிக்கையில் திருப்தி பெறாத புகார்தாரர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு கூட்டம் நடத்தப்பட்டது. எஸ்.பி., மோகன்ராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால், டி.எஸ்.பி., ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது, போலீஸ் நிலையங்களில் தீர்வு காணமுடியாத 62 மனுக்கள் எஸ்.பி., கவனத்திற்கு கொண்டவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், 50 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள 12 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள டி.எஸ்.பி.,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் புதியதாக 29 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.