திருக்கோவிலுார்- போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலை அகலப்படுத்தப்படாமல் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியாக திருக்கோவிலுார் உள்ளது. இதன் வழியாக விழுப்புரம், திருவண்ணாமலை, சங்கராபுரம், மூங்கில்துறைபட்டு, உளுந்துார்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக, திருக்கோவிலுாரை சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் விழுப்புரம் சென்று வருகிறது.
ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோவிலுார்- விழுப்புரம் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்படாததால், வாகன ஓட்டிகள் தினம் தினம் அவதியடைந்து வருகின்றனர்.
திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் செல்வதற்கு 50க்கும் மேற்பட்ட வேகத்தடைகளை கடக்க வேண்டும். 20க்கும் மேற்பட்ட வளைவுகள உள்ளன. இப்படி வளைந்து, நெளிந்து செல்லும் சாலை பல இடங்களில் குறுகலாக உள்ளது. ஒரு சில இடங்களில் தற்போது சாலையை விரிவு படுத்துகிறோம் என்ற பெயரில் கண்துடைப்பிற்காக சீரமைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, திருக்கோவிலுாரில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் சாலை முழுவதும் விழுப்புரம் மாவட்ட எல்லையில் வருவதால் அப்பகுதி நெடுஞ்சாலை துறையினர் பராமரித்து வருகின்றனர். ஆனாலும், இச்சாலை குறித்து நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் மாவட்ட எல்லையை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழி சாலைகளாக மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, திருக்கோவிலுாரில் இருந்து திருவண்ணாமலை சாலை நான்கு வழி சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
அதேபோல், போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை, முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாம்பழப்பட்டு ரயில்வே கேட் அருகே அணுகு சாலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மாவட்ட அமைச்சர் மட்டுமல்லாது, திருக்கோவிலுார் தொகுதியின் எம்.எல்.ஏ., வாக இருக்கும் பொன்முடி நடவடிக்கை எடுப்பாரா என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.