போடியில் இருந்து 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது குரங்கணி மலைப்பகுதி. இங்கிருந்து 22 கி.மீ., தூரத்தில் டாப்ஸ்டேஷன் உள்ளது.
இப் பகுதியை சுற்றி கொழுக்குமலை, முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல் உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு காபி, மிளகு, பலா, எலுமிச்சை, இலவம், ஏலம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியாகின்றன. மத்திய அரசு நிறுவனமான காபி டெப்போ , சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி, போலீஸ் ஸ்டேஷன், ஆரம்பப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், போடி நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் கொட்டகுடி ஆறு அமைந்துள்ளது.குரங்கணி - டாப் ஸ்டேசன் வழியாக மூணாறு செல்வதால் 40 கி.மீ., தூரம் குறைகிறது. செல்லும் வழியில் நீர்வீழ்ச்சிகள், பசுமையான மலை முகடுகள் அமைந்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர்.
இவ்வளவு வாய்ப்புகள் இப் பகுதியில் உள்ளோர் அவசரத்திற்கு தொடர்பு கொள்ள அலைபேசி டவர் வசதி இல்லை.
உலகமே நவீன தொலை தொடர்பு வசதிகளை பெற்றுள்ள நிலையில் குரங்கணி பகுதியில் அலைபேசி டவர் அமைக்கததால் இப் பகுதி மக்கள் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளனர்
5 ஆண்டுகளுக்கு முன்பு கொழுக்குமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பலியாயினர். அலைபேசி டவர் வசதி இல்லாததால் அப்பகுதியில் இருந்து மற்ற நபர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் சிரமம் ஏற்பட்டது.
இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க குரங்கணியில் பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அலைபேசி டவர் அமைக்க சர்வே மேற்கொண்டது. என்ன காரணத்தினலோ 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இத்திட்டம் கிடப்பில் உள்ளது. மலைக்கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் அலைபேசி டவர் அமைக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.