மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முதன்முறையாக பங்கேற்ற கலெக்டர் சங்கீதா, ''விவசாயிகளின் விருப்பப்படி மாதத்தில் 3வது வெள்ளியில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.
விவசாயிகளின் புகார் மனுக்களுக்கு 2 நாட்களுக்குள் அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் திவ்யான்சு நிகம், டி.ஆர்.ஓ., சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சுப்புராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சுப்புராஜ், வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு): விவசாயிகளுக்கான அடுக்ககம் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்வது குறைவாக உள்ளது.
கலெக்டர்: செயலியில் பதிவு செய்வதில் விவசாயிகளுக்கு என்ன பிரச்னை. மற்ற மாவட்டங்களை விட மதுரையில் பதிவு குறைவாக உள்ளதற்கு என்ன காரணம்.
விவசாயிகள்: எங்களுக்கு நேரடி பட்டா இல்லை. கூட்டு பட்டா தான் உள்ளது. அதனால் தான் பதியவில்லை. அண்ணன், தம்பிகள் ஒன்றாக பதிவு செய்ய வருவதில்லை.
கலெக்டர்: கூட்டு பட்டா இருந்தாலும் பதியலாம் என அரசு செயலர் தெரிவித்துள்ளார். எந்தெந்த இடத்தில் முகாம் அமைக்க வேண்டுமென தெரிவித்தால் ஏற்பாடு செய்யப்படும்.
மணிகண்டன், மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய், குளங்களில் தகவல் பலகை அமைக்க வேண்டும்.
சிவபிரபாகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர், மேலுார்: குடிமராமத்து செய்யப்பட்ட கண்மாய்களில் அமைத்துள்ளோம்.
கலெக்டர்: எல்லா கண்மாயிலும் தகவல் பலகை வைப்பது செலவு பிடிக்கும் விஷயம். அதை உடனடியாக திட்டமிட முடியாது.
பழனிசாமி, கே.கே. நகர்: கொட்டாம்பட்டி கேசம்பட்டியில் உள்ள பெரியருவி அணையிலிருந்து செல்லும் கால்வாய் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலுார் வஞ்சிக் கண்மாயை ஆய்வு செய்து அதன் தெற்கு பக்கம் மறுகால் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிவபிரபாகர், செயற்பொறியாளர்: கால்வாயை நிலஅளவை செய்து ஆக்கிரமிப்பு தொடர்பான படிவம் 1 வழங்குமாறு மேலுார் தாசில்தாருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். வஞ்சிக்கண்மாயில் மறுகால் ஓடை அமைக்க சாத்தியமில்லை.
விவசாயிகள் சிதம்பரம், பாண்டியன், அருண், முருகன், தர்மராஜ், மலைச்சாமி, பழனிசாமி, அய்யாக்கண்ணு ஆகியோர் மேலுார் பிரதான கால்வாய் தொடர்பான கண்மாய், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்தனர். வழக்கம் போல 80 சதவீத மனுக்கள் கண்மாய் ஆக்கிரமிப்பு, வரத்து ஓடை ஆக்கிரமிப்பு தொடர்பாகவே இடம்பெற்றிருந்தது.
கலெக்டர் கூறியதாவது:
இனி விவசாயிகள் விருப்பப்படி மாதந்தோறும் 3வது வெள்ளியில் கூட்டம் நடத்தப்படும். விவசாயிகள் தங்களது தனிப்பட்ட விவசாயம் சார்ந்த பிரச்னைகளை தெரிவிக்க வேண்டும். சங்கம் சார்ந்த பிரச்னைகளை தனியாக தெரிவியுங்கள். இனி மாதந்தோறும் நடக்கும் கூட்டத்தில் எந்தெந்த நபர்கள் பேச வேண்டுமென பட்டியலிடப்படும். மற்றவர்கள் மனுக்கள் கொடுத்து பதிந்து கொள்ள வேண்டும், என்றார்.
விவசாயி ஒருவர் புகார் தெரிவித்ததும் அதிகாரியை உடனடியாக கலெக்டர் பேச அழைத்தார். அந்த அதிகாரி 'பண்ணிருவோம் மேடம்' என்றுக்கூறிய பதிலில் திருப்தியடையாத கலெக்டர், ''பண்ணிருவோம் இல்லைங்க... பண்ணனும். ஆக்கிரமிப்பு என்றால் சர்வேயர் அளந்து உடனடியாக தாசில்தார் நோட்டீஸ் வழங்க வேண்டும். விவசாயியிடம் புகார் மனு பெற்ற 2 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அடுத்த கூட்டத்திற்குள் விவசாயியின் பிரச்னை தீரவேண்டும். எதையும் கடமைக்கு செய்யாதீங்க'' என்றார்.