அவனியாபுரம்: ''ரவுடிகளை தேர்தலில் வெற்றி பெற வைத்து ரவுடியிசம் செய்வது தான் தி.மு.க.,வின் திராவிட மாடல் ஆட்சி,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
குஜராத் மாடலை திராவிட மாடல் வெல்லவில்லை. அது பொய்யான செய்தி. சி.எஸ்.கே., கிரிக்கெட் அணியில் தோனி இருப்பதால் எல்லோருக்கும் பிடிக்கும். சி.எஸ்.கே. வில் ஒரு தமிழர் கூட இல்லையென்றாலும் நமக்கு சி.எஸ்.கே.வை பிடிக்கும். ஆனால் குஜராத் அணியில் மூன்று தமிழர்கள் விளையாடினர். கடைசி ஓவரில் 6 ரன், 4 ரன் அடித்தது ஜடேஜா. அவரது மனைவி பா.ஜ., எம்.எல்.ஏ. ஜடேஜா மனைவிக்காக ஓட்டு சேகரித்தார். 2024லிலும் இதுதான் தமிழகத்தில் நடக்கப்போகிறது. சி.எஸ்.கே. தோனிக்காக வென்றது. வெற்றி பெற்ற கோப்பையை கொண்டு வந்து பெருமாள் சன்னதியில் வைத்து பூஜை செய்தனர்.
வைரமுத்து மீது 19 குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் முதல்வருடன் இருக்கிறார். அந்தப் பாடகி பல மாதங்களாக பாலியல் குற்றச்சாட்டு வைத்து வருகிறார். ஆனால் ஒரு வழக்கும் பதியப்படவில்லை. விசாரணை நடைபெறவில்லை. தமிழக பா.ஜ., வைரமுத்துவை கைது செய்ய வேண்டும் என்று கூறினால் அது தவறா. ஜூலை 9 அன்று ராமேஸ்வரத்தில் இருந்து நடை பயணம் ஆரம்பிக்க உள்ளோம். தேசிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
தியாகராஜன் தவறு செய்யவில்லை
அமைச்சர் தியாகராஜன் எந்த விதத்திலும் தவறு செய்யவில்லை. அவர் ஒரு ஆதாரத்தில் தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார். அதை அவர் மறுக்கலாம். ஆனால் அவர் துறையை மாற்றி இருப்பது திராவிட மாடல் அரசில் யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதைதான் எடுத்துரைக்கிறது. அவரை மாற்றியது மதுரை மண்ணுக்கு தி.மு.க., செய்துள்ள மாபெரும் துரோகம்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ரெய்டு விவகாரத்தில், முதல் முறையாக வெட்கக்கேடான சம்பவத்தை தமிழகத்தில் பார்க்கிறோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கரூர் துணை மேயர், கவுன்சிலர் போன்ற தி.மு.க., பிரதிநிதிகள். இதுபோன்ற ரவுடிகளை வேட்பாளராக அறிவித்து ஜெயிக்க வைத்து 'ரவுடியிசம்' செய்வது தான் தி.மு.க., வின் திராவிட மாடல்.
இது வருமானவரித்துறை அதிகாரிகள் மீதான சவால். அவர்களை தாக்கி இருக்கிறார்கள் என்றால் எந்தவித சட்ட திட்டங்களுக்கும் உட்பட மாட்டோம் என்ற தைரியம் தான். இந்த விவகாரத்தில் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வது வரவேற்க வேண்டியது. அவர் மட்டும் செல்லவில்லை. அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
ஆனால் இந்த பயணம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். பிரதமர் மோடியின் அடையாளமான இந்தியா முதலீட்டை ஈர்க்கிறது. இதை வைத்துக் கூட ஸ்டாலினால் முதலீட்டை ஈட்ட முடியவில்லை என்றால் வேறு எதையும் செய்ய முடியாது. முதல்வர் எந்த முதலீட்டை ஈர்க்கிறார் என்பதை காண நாங்களும் ஆவலோடு இருக்கிறோம்.
இவ்வாறு கூறினார்.
அண்ணாமலை அறிக்கை: உண்மையான பிரச்னைகளை விவாதிக்க, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், நம் நாட்டில் இருக்க வேண்டும். அடிக்கடி இல்லை என்றாலும், ஒரு முறையாவது இருக்க வேண்டும்.தங்கள் கட்சி ஆட்சியில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தீர்கள். தற்போது, தமிழகத்தை சேர்ந்த சைவ ஆதினங்கள் செங்கோல் சடங்குகளை கேலி செய்கிறீர்கள்.காங்கிரஸ் ஆட்சியில் செங்கோல், 'வாக்கிங் ஸ்டிக்' ஆக துாக்கி எறியப்பட்டது. தற்போது, செங்கோல் அதன் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.