அய்யனார் என்பவர் தமிழ் நாட்டுப்புறக் காவல் தெய்வம் ஆவார். மனித அவதாரத்தில் வந்து பிறந்தவர். மிகப் பழங்காலத்திலிருந்து அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளதை அறிய முடிகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அய்யனார் என்ற தமிழ்ச்சொல் தலைவர் என்று பொருள்படும் ஐயா என்ற மூலச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. அய்யனாரின் மற்றொரு பெயர் சாஸ்தா ஆகும். இச்சொல் பழம் தமிழ் இலக்கியங்களில் சாத்தன் என்ற சொல்லாக வழங்கப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் சாஸ்தாவை குலதெய்வமாகக் கருதக்கூடிய புலவர்கள் மற்றும் வணிகர்களை சாட்டன் என்ற பெயருடன் குறிப்பிடுவர். சைவ நாயன்மார் அப்பர் தனது தேவார திருமுறையில்(4:32:4) சிவபெருமானை சாத்தனின் தந்தை என்று போற்றுகின்றார். கந்தபுராணம் ஐயனாரின் வரலாற்றை மகாசட்டன் படலத்தில் விவரிக்கின்றது. இதில் ஐயப்பன், சூரபத்மன் என்ற அரக்கனிடமிருந்து இந்திராணியைக் காக்க தன் தளபதியான மகாகலாவை அனுப்புகிறார் என்று கந்தபுராணம் கூறுகிறது. இங்கு அய்யனார், சாஸ்தா, தர்ம சாஸ்தா, ஐயப்பன் என்ற பல பெயர்கள் அய்யனாருக்கு உண்டு. மேலும், ஆயிரம் பெயர்களைக் கொண்டவராக இந்த அய்யனார் தெய்வம் திகழ்கிறார். சைவமும் வைணவமும் ஒருங்கிணைந்தது போல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது.
சிவபெருமானுக்கும் மோகினி உருவத்திலிருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் தான் அய்யனார் என்பது அய்யனார் பிறப்பு குறித்த நம்பிக்கை ஆகும். இப்படிப்பட்ட நாட்டுப்புறக் காவல் தெய்வமான அய்யனார் தான் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயிலிலும் அருள்பாலிக்கக் கூடிய தெய்வம் ஆவார்.
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாரைப் பல்லாயிரக்கணக்கான மக்கள் குலதெய்வமாக வணங்குகிறார்கள். கோயில்கள் இருவகையில் அமையும். ஆகம பாணியில் கட்டப்பட்டக் கோவில்கள் மற்றும் ஆகமம் அல்லாத திறந்த வெளிக் கோயில்கள். இவற்றில் ஆகம கோவில்களில் உள்ள அய்யனார் பொதுவாகச் சாஸ்தா அல்லது தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார். சேவுகப்பெருமாள் கோயில் ஆகமக் கோயில். ஆதலால் அங்குள்ள அய்யனார் தர்ம சாஸ்தா ஆவார். இந்த அய்யனார் கோயிலில் மண்ணை எடுத்துச்சென்றுபல ஊர்களில் வைத்து வணங்குகின்றனர்.
இங்கு நேரடியாக வர இயலாதவர்கள் அந்த கோவிலின் மண்ணை வணங்கினாலே அய்யனார் அருள் கிடைக்கும் என நம்புகின்றனர். பல இடங்களில் அவ்வாறு மண் எடுத்துச்சென்று கோயில் எழுப்பியும் உள்ளனர். புது வீடுகள் கட்டும்போது பூமி பூஜை செய்யும் இடத்தில் இந்த சேவுகப் பெருமாள் கோயில் மண்ணை வைத்துப் பூஜை செய்து பின்பு வீடு கட்டும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். சேவுகப்பெருமாள் அய்யனார் குலத்தை காக்கும் குல தெய்வமாகவும், ஊரைக் காத்து நிற்கும் ஊர்க்காவல் தெய்வமாகவும் திகழ்கின்றார் என்பது திண்ணம்.