நாகப்பட்டினம்:நாகையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆளும்கட்சி தொண்டர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற மாவட்ட நிர்வாகம், செய்தியாளர்களை வெளியேற்றிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில், 97 நபர்களுக்கு 1.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
அமைச்சர் மற்றும் மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், 'தாட்கோ' தலைவர் மதிவாணன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தி சேகரிக்க பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள், புகைப்படக்காரர்கள் காத்திருந்தனர்.
நிகழ்ச்சி துவங்கியதும் அங்கு வந்த பி.ஆர்.ஒ., செல்வக்குமார், பத்திரிகையாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.
இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து ஆய்வுக் கூட்டங்களிலும், ஆளும்கட்சி பிரமுகர்களுடன் வரும் ஆதரவாளர்களை வரவேற்று உபசரிக்கும் மாவட்ட நிர்வாகம், அரசின் செய்திகள் மக்களுக்கு சென்றடைவதை தடுக்கும் வகையில் பத்திரிகையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது, நிருபர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.