திருச்சி,:திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், ரயில் இன்ஜினுக்கான மின்மோட்டாரை திருடி விற்ற, இரு ஒப்பந்த பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி, பொன்மலையில் ரயில்வேக்கு சொந்தமான பணிமனை உள்ளது. இங்கு, ரயில் இன்ஜின்கள் பராமரிப்பு பணி நடக்கிறது.
இந்த பணிமனையில் வீணாகும் பொருட்களை எடுத்துச் செல்ல டெண்டர் விடப்பட்டுள்ளது. பணிமனையில் சேகரமாகும் கழிவுகள், லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், ரயில்வே பணிமனையில் இருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரயில் இன்ஜினுக்கான டிராக்சன் என்ற மின் மோட்டார் திருட்டு போனது. இது குறித்து, பொன்மலை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, பணிமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கழிவுகளை அள்ளிச்செல்லும் ஒப்பந்தக்காரரிடம் பணியாற்றும்
புதுக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 29, கோபால், 30, ஆகியோர்
மின் மோட்டாரை திருடியது தெரிந்தது.
அவர்கள் இருவரையும் கைது செய்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், மின் மோட்டாரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, பொன்மலை ரயில்வே போலீசார் கிரண், வெங்கடாச்சலம், சதீஷ்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.