தஞ்சாவூர்:பட்டுக்கோட்டை அக்னியாறு கோட்டத்தில் ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் நீர்வளத்துறை பொறியாளர்கள், 100 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாக, விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருவோணம் ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து மாவட்ட செயலர் சின்னதுரை கூறியதாவது:
கடந்த 2021 முதல், கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணி நடந்து வருகிறது.
இப்பணியை பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்ட பொறியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். அவர்கள், 12 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த அதிகாரிகள் தங்கள் கட்டுபாட்டில் உள்ள ஏரி, குளங்களிலும், வடிகால் வாரிகளில் உள்ள வண்டல் மண்ணை அனுமதியின்றி அள்ளி, கல்லணை கால்வாய் பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தரமற்ற பொருட்களை கொண்டு, பணிகளை செய்து வருகின்றனர்.
சில இடங்களில், பணி செய்யாமலேயே செய்ததாக ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து, 50 கோடி ரூபாய் ரூபாய் சுருட்டியுள்ளனர்.
துார்வாரும் பணிக்காக ஒதுக்கீடு செய்யும் நிதியில், 10 ஆண்டுகளில், 50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்து உள்ளனர்.
செயற்பொறியாளர் திலீபன், உதவி செயற்பொறியாளர் புஷ்பராணி, உதவி பொறியாளர் புனிதவதி ஆகியோர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பட்டுக்கோட்டை அக்னியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்திற்கும் முன், போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.