நாமக்கல்:நாமக்கல் அருகே, தாய்க்கு கோவில் கட்டி வரும் மகன், கோவிலுக்குள் தாயின் சிலையை வைத்து, அவரது கையாலேயே திறந்து வைத்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நாமக்கல், கூலிப்பட்டியை சேர்ந்தவர் பிரபு, 30; கூலிப்பட்டி-சிவியாம்பாளையம் சாலையில், கோவில் கட்டி வருகிறார். அங்கு தாயின் உருவச்சிலையை அமைத்த நிலையில், நேற்று தாயைக் கொண்டே சிலையை திறந்து வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தந்தை வாசு, 2003ல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அப்போது எனக்கு வயது, 10; என் தங்கை ஜீவாவுக்கு ஒன்பது வயது. தந்தை இறந்தவுடன் தாய் மணி, 48, எங்களை ஆளாக்க கடுமையாக போராடினார்.
பத்தாம் வகுப்பு வரை படித்த நான், 'வெல்டிங்' தொழிலை கற்று தேர்ந்து, கூலிப்பட்டியிலேயே சொந்தமாக பட்டறை அமைத்தேன். தொழில் நல்ல முறையில் நடந்ததால், தங்கைக்கு திருமணம் செய்து வைத்தேன். என் திருமணமும் முடிந்து ஒரு குழந்தை உள்ளது.
பாடுபட்டு வளர்த்த தாயை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறேன். ஆனாலும், அவரை என்றும் நினைவில் வைத்திருக்க, கூலிப்பட்டி-சிவியாம்பாளையம் சாலை சக்தி நகரில், 1,500 சதுர அடியில் கோவில் கட்டினேன். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, 3 அடி உயரம், 80 கிலோ எடையில், தாயின் முழு உருவச்சிலையை தயாரித்து கொண்டு வந்தேன். இந்த விஷயம் அனைத்தும் திறப்பு விழா நடந்த பிறகே, தாய்க்கும், குடும்பத்தாருக்கும் தெரியும். இந்த கோவில் என்னுடைய கனவு. விரைவில் பணி நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து தாய் மணி கூறும்போது, 'இப்படி ஒரு மகனை பெற்றெடுத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு தெரியாமலே, எனது சிலையை தயாரித்து, நண்பன் வீட்டில் பாதுகாத்து வந்துள்ளான். தற்போது என் மூலமாகவே திறந்து வைத்து, பெருமைப்படுத்தி உள்ளான்' என்று, ஆனந்த கண்ணீருடன் கூறினார்.