மரக்காணம்:மரக்காணம் அடுத்த சிறுவாடி, முருக்கேரி கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் மழை நீர் வடிகால் பணி பாதித்துள்ளது.
திண்டிவனம் - மரக்காணம் இடையேயான இரு வழிச்சாலையை கடந்தாண்டு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச் சாலையாக மாற்றி, அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மன்னார்சாமி கோவில், எண்டியூர், நள்ளாலம், பிரம்மதேசம், சிறுவாடி, முருக்கேரி, கந்தாடு உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையின் இரு புறமும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் சிறுவாடி, முருக்கேரி கடை வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
அதில் பெரும்பாலான கடைக்காரர்கள் தானாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர்.
ஆனால், ஒரு சில கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை இதுநாள் வரை அகற்றாமல் உள்ளனர். இதனால் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் முழுமை பெறாமல் உள்ளது.
மழை பெய்தால், கடைவீதியில் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் பலமுறை கூறியும் கண்டும் காணாமலும் உள்ளனர்.
இதனால் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி பாதிப்படைந்துள்ளது.
நேற்று மீண்டும் வருவாய்துறையினர் சிறுவாடி, முருக்கேரி கடைவீதியில் உள்ள அரசுக்கு செந்தமான இடத்தை அளந்து குறியீடு செய்தனர்.
ஆக்கிரமிப்புகளை தானாக முன்வந்து அகற்றாவிட்டால், எந்த ஒரு அறிவிப்புமின்றி காவல்துறை உதவியுடன் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அதிகாரிகள் எச்சரித்துச் சென்றனர்.