விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே ஆட்டு வியாபாரி போல் நடித்து,பூட்டியிருந்த வீட்டைத் திறந்து 14 சவரன் நகை,2 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த எழாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தபிள்ளை, 60; அவரது மனைவி விருத்தாம்பாள், 50; ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலை 10:00 மணி அளவில் இருவரும் ஆடு மேய்க்க புறப்படும் போது, ஸ்கூட்டரில் வந்த 30 வயது வாலிபர், ஆடு வாங்குவது போல் கோவிந்தபிள்ளையிடம் விசாரித்தார்.
அப்போது அவர் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்ல உள்ளதால், பின்னர் வருமாறு கூறிவிட்டு, அந்த நபரின் எதிரிலேயே, வீட்டை பூட்டி, சாவியைமின்மீட்டர் பெட்டி அருகே மறைத்து வைத்துள்ளார்.
இதை பார்த்து கொண்டிருந்த வாலிபர், ஆடுகளை வாங்க வியாபாரியை அழைத்து வருவதாக கூறி சென்று விட்டார்.
பின்னர், 12:00 மணியளவில் அந்த வாலபர் கோவிந்தபிள்ளை வீட்டிற்கு மீண்டும் வந்து, மீட்டர் பெட்டி அருகே உள்ள சாவியை எடுத்து, வீட்டைத் திறந்து உள்ளே சென்றார். சிறிது நேரத்தில்அவர்வெளியே வந்தபோது, வீட்டின் அருகே அமர்ந்திருந்த கோவிந்தபிள்ளையின் தாய் மங்காத்தாள், 80; யார் என்றவிசாரித்துள்ளார்.அதற்கு கோவிந்தபிள்ளை அனுப்பியதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பிற்பகல் 2:00 மணியளவில் சாப்பிட வீடு திரும்பிய கோவிந்தபிள்ளை, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 14 சவரன் நகை மற்றும் 2.5 லட்சம் ரூபாய்கொள்ளை போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடவியல் நிபுணர்கள்தடயங்களை சேகரித்தனர்.