கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கச்சேரி சாலையில் அரசு டவுன் பஸ் மீது சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரி மோதியதால், போக்குவரத்து பாதித்து வாகன ஓட்டிகள் தவித்தனர்.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் நோக்கி, பால்ராம்பட்டு கிராமத்தில் இருந்து நேற்று காலை அரசு டவுன் பஸ் வந்தது. போக்குவரத்து மிகுந்த கச்சேரி சாலையில் வந்தபோது, பஸ்சுக்கு பின்னால், சிமென்ட் கலவை ஏற்றி வந்த டேங்கர் லாரி, டவுன் பஸ்சின் மீது மோதியதில் அதன் பின்புறம் நசுங்கியது.
விபத்தால், பஸ் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக, அந்த சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் வரிசையாக நின்றன. அதையடுத்து, கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனங்களை அங்கிருந்து அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர்.